பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தமிழர் வரலாறு "கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி நடுகல்லின் அரண்போல" - பட்டினப்பாலை : 78 - 79. அதுபோலவே, முன்னரே கூறியவாறு, சுறாமீன் கொம் புருவில் கடற்கடவுள் வழிபாடும் தொடர்ந்து நடைபெற்றது. கம்பவடிவில் கடவுளும் வழிபடப்பட்டது. இது, போரில் சிறை பிடித்துக் கொண்டுவரப்பட்ட பகையரசர்களின் மனைவிமார்கள், ஊரார் நீர் உண்ணும் நீர்த்துறையில் நீராடி எழுந்து, அந்திப் போதில், மெழுகித் தூய்மை செய்து, அவியாத விளக்கேற்றிவைத்து, மலர்துவி அணி செய்த, பலரும் வந்து தொழ, ஊர்ப் பொதுவிடத்தே நடப்பட்ட இலிங்கமாதல் கூடும். "கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி, அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழு வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்" - பட்டினப்பாலை : 246 - 249. இக்கம்பம், கந்து என அழைக்கப்பட்டது. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை இயலில் (33), கடவுள் வாழ்த்துக்குரிய ஒன்றாகக் கூறப்படும் "கந்தழி பெரும்பாலும் இக்கந்தின்மாற்றுருவமாகும். ஆனால், உரையாசிரியர் நச்சினார்க்கினியர், கந்தழி என்பது, "ஒரு பற்றுக் கோடின்றி அதுவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்" என்று கூறியுள்ளார். இக்கருத்தால் உணரப்படும், கடவுள் நிலையில், மிக உயர்ந்த நிலையாம் அருவமாம் நிலை, பழந்தமிழ்ப் பாக்கள் எதிலும் இடம் பெறவில்லையாதலாலும், அத்தகைய வாழ்த்துப் பாவிற்கான எடுத்துக் காட்டு ஒன்றுகூட அவரால் காட்ட இயலாத அளவு உருவம் அற்று அருவமாம் ஒன்றைப் பாடி வழிபடும் கொள்கை, உண்மையான பழந்தமிழ்க் கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது ஆதலாலும், அவர் விளக்கம் அறவே, ஒப்புக்கொள்ளத் தக்கதன்று.