பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 . . . . தமிழர் வரலாறு வரும் தொடர்களில், வணிகர் குலத்தைக் குறிக்கும் போதெல்லாம், "வணிகர்" என, அவர் குலப் பெயரிட்டுக் குறிப்பிடாமல், அரசகுலத்தவர்க்கு அடுத்து வைத்து மதிக்கத்தக்க இனத்தவர் என்ற அவர் குலப்பெருமை தோன்றக் குறிப்பிடுவதையே இளங்கோவடிகளார் மரபாகக் கொண்டு உள்ளார் என்பது தெளிவு. ஆகவே, "அரைசு விழை திருவின் பரதர்" என்ற தொடரில் வரும் "அரைசு" என்ற சொல்லோ, "அரைசர் பின்னோர்" என்ற தொடரில் வரும் "அரைசர்" என்ற சொல்லோ, பொதுவாக, அரசர் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ள சொல்லேயன்றிக் குறிப்பிட்ட அரசன் ஒருவனைச் சுட்டிக் கூறப்பட்ட சொல் அன்று : மங்கல வாழ்த்துப் பாடலில் வரும், "பெருநிலம் முழுதாகும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக்குடி” (31-32) என்ற தொடரின் நிலையும் அஃதே. பெரிய நாட்டை முழுமையாகத் தனியொருவனாக நின்று ஆளும் பேரரசனால், முதற்குடியாக வைத்து மதிக்கத்தக்க ஒப்பற்ற குடி" எனும் பொருள் உடையதாய் வணிகரைக் குறிக்கும், அத்தொடரில் வரும் "பெருநிலம் முழுதாளும் பெருமகன்" என்ற தொடரும், ஒரு பெரிய நாட்டை முழுமையாக ஆளும் ஒரு பேரரசன் என்ற பொதுப் பொருள் உணர்த்தவல்லதேயல்லது, உரையாசிரியர் கொண்டதுபோல், கரிகாலனைத் தனித்துக் குறிக்க வழங்கப்பட்ட சொற்றொடர் அன்று. பழந்தமிழ் மக்கள், அவர்கள் எந்நிலத்து மக்களே ஆயினும், அந்நிலத்துக்குரிய கடவுளர்க்கு விழா எடுத்து, அக்கடவுளர்தம் பெருமைகளைப் பாராட்டிப் பாடிமகிழும் நிகழ்ச்சிகளின் முடிவிலும், அதேபோல் கடலாடல்போலும் இன்ப விளையாடல்கள்போதும், அகத்துறை நலம் சிறக்கப்பாடிக் களிக்கும்போதும், இறுதிப்பாட்டு, அந்நாடாளும் மன்னன் பெருமை கூறி வாழ்த்தும் பாட்டாகவே அமையும்; அவ்வாறு பாராட்டப் பெறும் அரசன், அப்போது அரியணையில் இருப்போனாக இருக்கவேண்டும் என்று கொள்ளாமல் அக்குல முன்னோனாகவும் இருப்பன்: இது மரபு.