பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 - தமிழர் வரலாறு சாமிநாத அய்யர் அவர்களால், இப்பாடபேதம் குறிப்பிடப் பட்டிருப்பது வரந்தரு காதையில், கயவாகுவின் நிகழ்ச்சி, சிலப்பதிகாரத்தில், வரந்தரு காதையில் மட்டுமல்லாமல், உரைபெறு கட்டுரையிலும் இடம் பெற்றுளது. அது கூறும் அவ்வுரைபெறு கட்டுரையில், அவன் பெயர் "கயவாகு" என்றே வந்துளது. பாடபேதம் எதுவும் குறிப்பிடப் படவில்லை. தஞ்சையிலிருந்து பத்தினித் தெய்வத்தின் காலணிகளைக் கொண்டு வந்த இலங்கை வேந்தன் பெயரை, மகாவம்சம் "கயவாகு" என்றே குறிப்பிட்டுளது. காட்டிய இச்சான்றுகளால், "கயவாகு" என்பதே சரியான பாடமாம் என்பது ஐயத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்படுகிறது. ஆகவே, எங்கோ ஓரிடத்தில் கூறப்பட்டிருக்கும் பாடபேதத்தை, வலுவான ஒரு முடிவைத் தகர்த்தெறியும் ஆயுதமாகக் கொள்வது வாத நெறியாகாது. ஆகக் கூறிய இவ்விளக்கங்களால், செங்குட்டுவன், கயவாகுவின் காலத்தவன்தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை என்பதும், ஆகவே, அக்கயவாகுவின் காலமாம் கி. பி. 177-199 காலமே, செங்குட்டுவன் காலமாம் என்பதும் உறுதி செய்யப்படுகின்றன.