பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் 391 உரையாக வடித்துத் தந்துள்ளார். மிகத்தெளிவாக உளது என்றாலும், அஃது ஒரு கற்பனைக் காட்சி அன்று: மாறாக, இப்பாட்டில் இடம் பெற்றிருக்கும் செய்திகளையே அடிப்படையாகக் கொண்டது. அது, சென்னைக் கிறித்துவக் கல்லூரி 1901, ஆம் ஆண்டு மலரில் வெளியிடப்பட்டது. ஈண்டு, அது எடுத்தாளப்பட்டுளது; "கதவில் பொறிக்கப் பட்டிருக்கும் காவல் தெய்வத்திற்கு, வழிபடு முறையாக, நாள்தோறும் எண்ணெய் வார்ப்பதால் கறுத்துக் காணப்படும் கதவுகள் பொறுத்தப்பட்ட, மழைமேகங்கள் தவழும், உயர்ந்த மலைபோலக் காட்சி தரும் வாயிலை அடைகிறோம். புதுவெள்ளம் பெருக்கெடுத்தோடும் வையைபோல, மக்கள் வெள்ளம் வழங்கும், அவ்வாயில் ஊடே, நெருக்கித் தள்ளிக் கொண்டு உட்புகுகிறோம். தெருக்கள் ஆறுபோல் அகன்று உள்ளன. தெருவின் இருமருங்கிலும் உள்ள வீடுகள், காற்றும் ஒளியும் நன்கு உட்புகுவதற்கு ஏற்பக் கணக்கிலாக் காலதர் களைக் கொண்டுள்ளன. தெருவுகளில் போக்குரவரவும் இடையற்றுப் போகா : எழும் பேரொலியும் இடையற்றுப் போவதில்லை. அத்தகு தெருவுகளில், நாளின் இருபத்து நான்கு மணிகளிலும் திகழும் பல்வேறு சிறப்புகளைப் புலவர், மீண்டும் நினைவில் கொண்டு எண்ணிக் காண்கிறார். "பெரும்பாலும், விடியற்போதை உடன் கொண்டே, வைகை ஆற்றின் பக்கம் இருந்து நகரை நோக்கிச் செல்லத் தொடங்குகிறோம். ஏறத்தாழ ஏழு மணி அளவில் தெருவுகளை அடைகிறோம். என்றாலும் அவை, அப்போதே நிறைந்து விரைந்து தொழில்படத் தொடங்கிவிட்டன. கடல் அலைபோல் மோதும் மக்கள் பெருங்கூட்டம், வருவதும் போவதுமாக எங்கும் அலைந்து கொண்டிருந்தது. பல்வேறு மொழியினரும் ஒரு சேர எழுப்பும் பேரொலிக் கலவையில், காற்றால் போதுண்ணும் கடலின் பெருமுழக்கே போலும் முழக்கினைக் கேட்பதல்லது. எதையும் தெளிவாகக் கேட்பது நம்மால் இயலவில்லை. நால்வேறு திசைகளிலும், நிகழும் முரசு முழக்கமும், பாட்டும், ஆட்டமும், வாணிகத்திலும், இன்ப நுகர்ச்சிகள் எழுப்பும் பேரிரைச்சலே,