பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 407 அப்பிழையைப் பொறுத்துக்கொள்ளுதலும், அவர் செய்த பிழை, பொறுத்துக் கொள்ளலாகாப் பெரியதாயின், அவரை அழித்தற்காம் வழிமுறைகளை ஆராய்ந்து நேக்கும் பரந்த ஆராய்ச்சி உணர்வும், அவரை அழித்து ஒழித்தற்கேற்ற மனவலி, படைவலிகளும், அவற்றால் அவரை அழித்தலும், அவர் பணிந்து வழிபட்டால் அவர்பால் காட்டும் அருளும் ஆகிய இவ்வகைப் பண்புகளையும் உடையோய்! நினக்கு உரிமையுடைய கீழ்க்கடலில் காலையில் தோன்றும் ஞாயிறு, மீண்டும் உனக்கு உரிமையுடையதான, வெள்ளிய தலை களையுடைய அலைகளைக் கொண்ட மேல் கடலில் மூழ்கு தற்கு ஏற்ப, இடையறாப் புதுவருவாய்களைக் கொண்ட ஊர் களையே கொண்ட மிகப்பரந்த நல்ல நாட்டின் வேந்தே! வானவரம்பன் எனும் பெயர் உடையாய்! பெரும்ானே! அசையும் தலையாட்டம் அணிந்த குதிரைப்படையுடைய பாண்டவர் ஐவருடன், சினங்கொண்டு, அவர் நிலத்தைத் தமதாகக் கொண்டுவிட்ட பொன்னால் ஆன தும்பை மாலை யுடையோனாகிய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் போரிட்டு போர்க்களத்தின்கண் அழியும் வரை, பெரும் சோறு ஆகிய மிக்கஉணவை, அவ்விருவர் படைக்கும் வரை யாது வழங்கியவனே! பால், தன் இனிமைப் பண்பை இழந்து புளிப்பினும், ஞாயிறு, ஒளிதரும் தன் இயல்பு கெட்டு இருளினும், நான்கு வேதங்களில் ஒழுக்க நிலைகெட்டு வேறுபடினும், தம் இயல்பில் வேறுபாடு இல்லாத, சூழ்ச்சித் திறம் மிக்க மந்திரச் சுற்றத்தாருடன், அழியாது நெடுங்காலம், புகழ்மிகவாழ்ந்து, நடுக்கம் இன்றி நிலைத்து நிற்பாயாக! பக்கமலைக்கண், சிறிய தலைகளையுடைய குட்டிமான்களைக் கொண்ட, பெரிய கண்களையுடைய பெண் மான் கூட்டம், அந்திக்காலத்தில், அந்தணர்கள், தாம் ஆற்றவேண்டிய செயற் கரிய கடனாகிய, ஆவுதி அளித்து எழுப்பும் முத்தி அளிக்கும் பேரொளியின்கண், அச்சம் ஒழிந்து இனிதே உறங்கும் பொற்சிகரங்களையுடைய இமயமலையும், பொதிய மலையும் போல, உயர்ந்து நின்று, நடுக்கின்றி, நெடிது வாழ்க!" "மண் திணிந்த நிலனும், நிலன் ஏந்திய விசும்பும்,