பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தமிழர் வரலாறு

-களாக எண்ணப்பட வேண்டிய மிக நீண்ட கால கட்டமாதல் வேண்டும்)

2) பாவாணர்கள், ஒவ்வொரு நிலப்பகுதியிலும், பாடத் தொடங்கி, அந்நிலப்பகுதியில், மக்கள் வாழ்க்கை நிலைகள் அந் நிலங்களின் மாவடை, மரவடைகள், சுற்றுச்சூழலுக்கு எதிர் ஏற்று வளர்ந்த பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தங்கள் பாக்களில் தங்களை அறியாதே எதிர் ஒலிக்கும் காலகட்டம்.

3) ஒரு பாட்டு, ஐவகை நிலப்பகுதியில் எந்நிலப்பகுதியில் பாடப்பட்டிருந்தாலும், அது, குறிப்பிட்ட ஒரு ஒழுக்கம் பற்றிக் கூறுவதாயின், அதை, அந்நிகழ்ச்சிக்கு உரியதிணைக்கே உரியதாக ஆக்கச்செய்யும், மாற்றுதற்கியலா இலக்கிய மரபுகளாகப், பாவணர்களின் பாடற்பணிகள் உறுதிப்படுத்தப்பட்ட காலகட்டம். இயற்கை நிலப் பிரிவு, மற்றும் அந்நிலத்து நிகழ்ச்சிகளைக் கூறும், ஒருவகைப் பாடல், என்ற இரு பொருள்களை, ஒரு நிலையில் இயல்பாகக் குறித்த, திணை என்ற அச்சொல், இப்போது, இலக்கிய மரபாக, ஐந்து இயற்கை நிலப் பிரிவுகளில், ஒரு நிலப்பிரிவோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.

இம் மரபுகளெல்லாம், தொல்காப்பியனார் இயற்றிய தமிழ் இலக்கணமாம், தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும், கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்படாத காலத்தில் இயற்றப்பட்டு, இன்றுவரை அழியாமல் இருக்கும் மிகப் பழைய தமிழ் நூலாம் இந்நூல், செய்யுள் இலக்கணம் பற்றிய, இப்போது ஒன்று கூடக் கிடைக்காத, பழைய விதிமுறைகள் பலவற்றைச் சுட்டுகிறது. அவ்விலக்கணம் தோன்றுவதற்கு அடிப்படையாய் அமைந்த, பெரும்பகுதி அல்லது முழுவதும் அழிந்துபோன தமிழ்ச் செய்யுள் இலக்கியப் பெருந்தொகுதி பண்டு இருந்ததை ஊகிக்கச் செய்கிறது.