பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர் காலம்

143

போலும்" எனக் கூறிச் செல்வதைப் பல இடங்களில் காணலாம். இதைத், திருவாளர் பி. டி. எஸ். அவர்களும் உணர்ந்துள்ளார். "தொல்காப்பியம், தனக்கு முன் இருந்த இலக்கண நூல்களுள் எதுவும் இப்போது இல்லை. தனக்கு முன், எண்ணற்ற தமிழ்ப் பாக்கள் இருந்ததை உணர்த்துகிறது. அப் பாக்களில் பெரும்பாலன, அல்லது அறவே அழிந்து போயின. இப்போதுள்ள பழந்தமிழ்ப் பாக்களெல்லாம், தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னர்ப் பாடப் பட்டனவே. உரையாசிரியர்கள், தொல்காப்பியம் கூறும் இலக்கணத்திற்கான மேற்கொள்களை, இப்பாடல்களில் காண இயலாது, "மேற்கோள் வந்தவழிக் கண்டுகொள்க" எனக் கூறி விடுவதும் செய்துள்ளனர்" என, இந்நூலிலேயே, அவர் குறிப்பிடுவதும் காண்க".

"The earliest Tamil poems which are now extant belong, almost all, to the age that succeeded the time of Tolkappyanar, and commentators on the Tolkappiyam find it difficult to discover in this later poetry illustrations for many of Tholkappiyar's rules; some times they tell the reader to find his own illustrations when he can.” (Page : 70)

ஆக, பார்ப்பனப்பாங்கன் பற்றிய குறிப்பு இடம் பெற்ற பாக்கள், பண்டு பாடப்பெற்றிருந்தமையாலேயே தொல் காப்பியர், அதற்கு இலக்கணம் வகுத்தார். அவர் காலத்துக்கு முன்னர் வழக்கில் இருந்து, பின்னர் வழக்கிறத்து போன பலவற்றுள் இதுவும் ஒன்று ஆகலாம். ஆகவே, அது, பிற்காலப் பாக்களில் இடம் பெற்றிலது என்றுதான் கொள்ளவேண்டுமே ஒழிய, அது, தமிழ்ப் பாக்களில் இடம் பெறவில்லை. ஆகவே, அது தமிழர் மரபு அன்று: சமஸ்கிருத மொழியாளர் மரபு, அம் மரபு, சமஸ்கிருதத்தில் வளர்ந்தது, கி.மு. 300இல் அது, தமிழகம் வந்து தமிழரிடையே செல்வாக்குப் பெற மேலும் சில நூற்றாண்டுகள் கழிந்திருக்கும். ஆகவே, அதற்குத் தம் இலக்கண நூலில் வடிவம் கொடுத்த தொல்காப்பியர், கி. பி. முதல் நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்திருக்க இயலாது எனக் கொள்வது முறையாகாது.