பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அதிகாரம் VIII

ஆகமங்களின் தோற்றம்

வேதங்களுக்கு எதிரான ஆகமங்கள் :

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ‘’இந்திய தத்துவத்தின் சுருக்கம்‘’ என்ற என் நூலில், இந்தியர்களால் இன்று பின்பற்றப்படும் சமயம், பெரும்பாலும் ஆகமங்களையே முழுமையாக அடிப்படையாகக் கொண்டுளது. வேதங்களோடான தொடர்பு ஒரு சிறிதும், அல்லது, அறவே. இல்லை எனக் குறிப்பிட்டிருந்தேன். வேதநெறிக் கடவுள். வழிபாட்டுமுறையான வைதீகநெறி, மகாபாரதப் போருக்குப் பின்னர் அழியத் தொடங்கிவிட்டது. இக்காலை, அது. பெரும்பாலும் அழிந்தே விட்டது. ஸ்ரெளத கர்மாவின் (அதாவது, வேதவழிபாட்டு நெறியின்) பெரும்பகுதி அழிந்தே விட்டது. "அக்னி ஆதானம், மிகவும் எளிமை யாக்கப்பட்ட ‘’வாஜபெயம்‘’, ‘’கருட சயனம்‘’, மற்றும். "சோம யாகம்'‘ போலும், அத்துணைச் சிறப்பிலா வழிபாட்டு நெறிகள் மட்டுமே, ஒரு சில மக்களால் அவ்வப்போது மேற். கொள்ளப்படுகின்றன. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தீ ஓம்பல் கடமையை மூன்று தலைமுறைகளாகப் புறக்கணித்துவிடுவரோ, அப்பார்ப்பனக் குடும்பத்தவர், பார்ப்பனராம் தகுதியை இழந்தவராவர் என்ற விதிமுறையை, அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டவழி நனிமிகக் குறைவான குடும்பத்தவரே பிராமணர்களாக மதிக்கப்படுமளவு,

‘’ஸ்மார்த்த கர்ம‘’ நெறிதானும் விரைந்து மறையலாயிற்று. இருந்தும் இந்தியா ஆழ்ந்த சமயச் சார்புடையதாகவே உளது; ஆனால் அந்த ஆழ்ந்த சமய உணர்வு, வேதநெறி வழிபாட்டு முறைகளையல்லாமல், ஆகமநெறி வழிபாட்டு முறை. அளவிலேயே அமைந்துளது.