பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரம் : XII

வழக்கில் உள்ள பழந்தமிழ்ப் பாக்கள் :

பாக்களின் தோற்றம் :

பாக்கள், பொதுவாக, கடவுள்களையும், காவலர்களையும் பாராட்டும் புகழுரைகளோடு பிறந்தன. எப்பொழுதெல்லாம், வழிபாட்டு நெறி ஒன்று நிறுவப்படுகிறதோ, அல்லது, ஓர் அரசகுலம் தோன்றுகிறதோ, பாணர் முதலாம் புகழ் பாடுவார். அவற்றைப் பாராட்டிப் பாடுவதன் மூலம், அக்கடவுள்களின் அக்காவலர்களின் அரவணைப்பைப் பெறத் தொடங்கினர். வேதங்கள் போலும் சமயப்பாக்களின் திறனாய்வை விடுத்துப் பார்த்தால், எந்த ஒரு மொழியிலும், சமயச்சார்பற்ற பாட்டு, அம்மொழி பேசும் அரசன், பாராட்டத்தக்க போர் வெற்றிகளைப் பெறும்போது பாடத் தொடங்கப் பெறுகிறது என முடிவு கொள்ளலாம். பாணர் முதலாம் இரவலர்கள், இறைச்சி மீன் பாலும், இனிய மதுவின் பாலும் தணியா வேட்கையுடையராய், எப்போதும் அரைப் பட்டினியோடிருப்பர். காதல், போர் ஆகிய துறைகளில், மன்னர்களும், குறுநிலத்தலைவர்களும் பெறும் பெருஞ்செயல்களைப், பாக்களில் வைத்துப் பாராட்டுவதன் மூலம், இறைச்சியையும், இனிய மதுவையும் பெற முயற்சிப்பர். தமிழ்க் கவிதைக்கலை, பிறந்த வழி தெளிவாக, உறுதியாக, இதுவே.

நனிமிகப் பழம் பாடல்களெல்லாம், உண்மையில், பேச்சுவழக்கிலிருந்த, திருந்தாக் கிளை மொழிகளிலேயே இருந்தன. சமஸ்கிருத மொழி, சமஸ்கிருதமாக (அதாவது செப்பம் செய்யப் பெற்று, மரபுவழி நெறிப்படுத்தப்பட்டு கண்டிப்பான இலக்கண விதிமுறைகளின் கீழ்க் கொண்டு