பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

தமிழர் வரலாறு

வரப்பட்ட நிலை) திருந்திய வடிவமாக ஆக்கப்பட்டு, வேத மந்திரங்களின் யாப்பு முறைகளும், இலக்கிய மரபுகளும் தோன்றுவதற்கு முன்னர்ப், பல நூறு ஆண்டுகாலம் வழக்கில் இருந்திருக்க வேண்டிய சமஸ்கிருத நாடோடிப்பாடல்கள் அழிந்துபட்டது போலவே, அப்பழந்தமிழ்ப் பாடல்களும், அழிந்துபோயின. வேத மந்திரங்கள், மார்ஸ் முல்லர், வெறி யுணர்வோடு விளக்குவது போல், “குழந்தை நிலை மானுடத்தின் பொருளற்ற உளறல்” அன்று. அம்மந்திரங்களின் மொழிநடை, “புலமை நலம் வாய்ந்த இலக்கிய, மொழி நடை”, “மதகுரு, வழிபாட்டு இசைப்பாணர்களுக்கிடையே, தலைமுறை தலைமுறையாகக் கொண்டுவரப்பட்ட, செயற்கையாக வழக்கிறந்து போன தாக்கப்பட்ட பழம் பெரும் மொழி. [A.Macdonell. Sans. Lit. P. 20.] வேறு நடையில் சொல்வதானால், வேதமொழி, பாதிரி முதல் பறையன் வரையான, எல்லா நிலையில் உள்ளாராலும் பேசப்பட்ட ஒரு மொழி அன்று. அது ஒரு “தேவ பாஷை”. அது போலவே, இப்போது நாம் பெற்றிருக்கும் பழந்தமிழ்ப் பாடல்களெல்லாம், ஒப்புநோக்க, பிற்பட்டகால இலக்கிய வளர்ச்சியினைக் காட்டுவனவாம். அவற்றின் மொழிநடை, சாதாரண மக்களின், பேச்சுநடையன்று. நனிமிகத் திருத்தம் பெற்ற, மரபுவழிப்படுத்தப்பட்ட, இலக்கிய நடையாகும். இப்பழம் பாடல்கள், யாப்பிலக்கண விதிகளின் கட்டுப்பாட்டிற்கு உறுதியாக அடங்கியிருப்பவை, இலக்கிய மரபுகளின், நனிமிக உயர்ந்த, பல்வேறு விதிமுறைகளை விளக்கிக் காட்டவல்லன.

இலக்கியக் கிளைமொழிகள் :

தமிழ் அரச இனங்கள் மூன்றும், தென்னிந்தியா, ஸ்ரீ ராமனால் அமைதியுறப் பெற்ற பின்னர், ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன். இம் மூன்று இனங்களில், பாண்டிய அரச இனம், மதுரை நாடு என, இன்று நாம் அழைக்கும் பகுதியில், ஆண்டிருந்தது. இந்நாடு, தமிழகத்தின், இருதயம் போலும் மைய இடமாகும்.