பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்கில் உள்ள பழந் தமிழர் பாக்கள்

243


உறவுக்கு முற்பட்ட திருமண உறவுக்குப் பிற்பட்ட, காதல் நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. அப்பாக்களில், மூன்று, எழுதியோர் பெயர் அறியப்படாதன. ஏனைய பாக்கள், சிலர் பண்டைக்காலத்தைச் சேர்ந்தவராகவும், ஏனையோர், நான்கு, ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த வராகவும், உள்ள 142 புலவர்களால் பாடப்பட்டுள்ளன) அப்பாக்கள், அவை பாடப்பட்டபோது சிறப்புற்றிருந்த அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் பற்றிய, பாராட்டத்தக்க பேரரசர்கள், பெரிய வள்ளல்களின் வரலாறுகளை எழுதத் துணைபுரியவல்ல குறிப்புகளை உள்ளடக்கிய எண்ணற்ற உவமைகளைக் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கைபற்றிய செய்திகளையும் பெறலாம்: இத்தொகையில் உள்ள பாக்கள், 13 அடிகளிலிருந்து 37 அடிகள் வரை என அளவால் வேறுபட்டுள்ளன. முதற் காட்சியிலேயே கொள்ளும் காதல், அக்காதல் தொடர்பான நிகழ்ச்சிகளைக் கூறும் குறிஞ்சி, காதலர்களிடையே பல்வேறு காரணம் குறித்து நிகழும் பிரிவுகளையும், பிரிவு இறுதியில் இருவரும் ஒன்றுபடும் கூட்டத்தையும் கூறும் முல்லை, பாலை, நெய்தல், பரத்தையர் இடையீட்டால் மண வாழ்க்கையில் இடம்பெறும் ஊடல், கூடல்களைக் கூறும் மருதம் ஆகிய அகப்பொருள் குறித்த ஐந்து தலைப்புகளும் இத்தொகை நூலில் விளக்கப்பட்டுள்ளன. இப்பாக்கள், ஒருவகை செயற்கை முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன; 1 முதல் 399 வரையான பாக்களில் ஒற்றைப்படை எண்ணுள்ள பாக்கள் பாலைத் திணை குறிக்கின்றன. 4 முதல் 394 வரையான பாக்களில் 4 என்ற எண்கொண்டு முடியும் எண்ணுடைய பாக்கள் முல்லைத் திணை குறிக்கின்றன: அதுபோலவே, 6 முதல் 396 வரையான பாக்களில் 6 என்ற எண் கொண்டு முடியும் எண்களைக் கொண்ட பாக்கள் மருதத் திணை குறிக்கின்றன. 2 முதல் 398 வரையான பாக்களில், 2, 8 என்ற எண்களில் முடியும் பாக்கள் குறிஞ்சித் திணை குறிக்கின்றன. பத்து என்ற எண் கொண்டு முடியும் எண்களைக் கொண்ட் பாக்கள் நெய்தல் திணை குறிக்கின்றன;