பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

தமிழர் வரலாறு

இம்மாலைக் காலத்தை, இரவை எல்லையாகக் கொண்டு கடந்துவிடலாம்; ஆனால், தோழி! அவ்வாறு மாலைக் கொடுமையைக் கடந்துவிடுவதால் யாது பயன்? அடுத்துக் கடக்க வேண்டிய இரவு என்னும் கடல் இருக்கிறதே, அது கடத்தற்கரிய கடலினும் பெரிதாக உளதே! அதை எவ்வாறு கடப்பது?”

“எல்லை கழிய, முல்லை மலரக்
கதிர்சினம் தணிந்த கையறு மாலையும்
இரவுவரம் பாக நீந்தினம் ஆயின்,
எவன்கொல்? வாழி! தோழி!
கங்குல் வெள்ளம், கடலினும் பெரிதே!”
-குறுந்தொகை : 387


நெய்தலில் பிரிவுப் பெருந்துயர் :

பிரிந்துறையும் பெண்ணின் உள்ளத்தை அலைக்கழித்து நோவப்பண்ணும் நெடும் பிரிவு, கடல் சார்ந்த நிலத்து ஒழுக்கமாம் நெய்தல் திணையோடு தொடர்புடையது. “வெள்ளை நாரைகள் ஓயாது ஒலிக்கும், இனிய மணம் நாறும் கடற்கரையில், மலர் செறிந்த சோலையில் உள்ள அன்றலர்ந்த புது மலர்களைக் கலக்கச் செய்து வீசும் அலைகள் வந்து மோதி, உடைந்து பின்னிடும் துறைக்கு உரியவனாகிய தலைவனோடு, பல்லெல்லாம் தோன்ற வாய்விட்டுச் சிரித்து அன்று மகிழ்ந்ததன் பயன், இன்று நம் இயற்கை அழகு அழிய, நம் தோள், நலம் கெட்டு மெலிய, அல்லல்படும் நெஞ்சோடு இரவெல்லாம் உறங்காமல், பசலையுற்று நாம் அழிந்து போவதுதானோ?”

“தொல்கவின் தொலைந்து, தோள்நலம் சாஅய்,
அல்லல் நெஞ்சமொடு அல்கலும் துஞ்சாது
பசலை யாகி விளிவது கொல்லோ?

வெண்குருகு நரலும், தண்கமழ் கானல்,