பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

தமிழர் வரலாறு

செல்லும், நெய்தல் மலர் போலும் மையுண்ட கண்களை உடைய, என் மகளை, பனங்குருத்துக்களைப் பிளந்து பதனிடுவான் வேண்டிப் போட்டுப் பரப்பும், மாலைப் போதில் விரிந்த நிலவொளியிலே சென்று, தேடிப் பின்சென்று காணும்படியாகச் செய்த, இதற்கு முன்னரே, என்னைப் பெரிய கரிய தாழியில் இட்டு அடக்கம் செய்வதற்கு ஏற்ப, என் உயிரைக் கொண்டு செல்லாத அந்தக் கூற்றுவன் தன் வலி அழிந்து, அத்தாழியில் இட்டுக் கவிக்குமாறு இறந்து போகக் கடவனாக.

‘’இரும்புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி,
பைந்தாது எருவின் வைகுதுயில் மடியும்
செழுந்தண் மனையோடு எம் இவண் ஒழியச்
செல்பெரும் காளை பொய் மருண்டு, சேய் நாட்டுச்
சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்
வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த,
குவளை உண்கண் என் மகளோ ரன்ன
செய்போழ் வெட்டிப் பெய்த லாய
மாலை விரி நிலவில் பெயர்புபுறம் காண்டற்கு
மாயிரும் தாழி கவிப்பத்
தாவின்று கழிக எற் கொள்ளாக் கூற்றே.”

- -நற்றிணை : 271

காதல் கொண்டாரை அடைவதில் ஏற்பட்டுவிடும் காலக் கழிவின் நீட்சி, காதல் உணர்வை, இயல்புக்கு மாறான வகையில் வெளியிடுவதாம் முறையை வளர்த்துவிட்டது. அதுவே, காதற்பாட்டின் - அகத்துறைப் பாட்டின் - ஒரு பொருளாகவும் ஆகிவிட்டது. காதலில் தோல்வியுற்ற ஒருவன் மேற்கொள்ளும் நனிமிகக் கொடுமை வாய்ந்த முறை, பனை மடல்களால் ஆன குதிரை மீது அமர்ந்துகொள்ளும் மடலேறுதல் என்பதாம். இதை விளக்க, பிற்காலப் பாடல்கள்