பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

271


கானலிடத்துக்கு உன் தோழிமாரோடு, காலைப்பொழுதிலேயே சென்று, தேன் துளிக்கும், மணம்கமழும் மலர்களை உடைய நெய்தலின், ஒன்றோடொன்று மாறுபடும் உருவம் வாய்ந்த இலைகளைப் பறித்துக் கொணர்ந்து ஆடையாகத் தைத்து அதை உடுத்துக்கொண்டு. சிற்றில் புனைந்து, அது சிறக்கக் கோலமும் இட்டு மகிழ்ந்து விளையாடி, புலால் நாறும் அலைகளால் மோதுற்று மோதுற்று வளைந்துபோன அடியை உடைய கண்டல் மரத்து வேர்களின் இடையே, இணை இணையாகச் செல்லும் சிவந்த நண்டுக் கூட்டங்களின் நடை அழகைக் கண்டு மகிழும், இவைபோலும் சிறுசிறு விளையாடல்களையும் கைவிட்டுப் பெரிதும் வருந்திக் கிடக்கின்றனையே ; உனக்கு வந்துற்ற, அத்துயருக்கு யாதுதான் காரணம்? கூறாய்தோழி !‘’

‘’உரையாய்; வாழி! தோழி! இருங்கழி
இரையார் குருகின் நிரையறைத் தொழுதி,
வாங்குமடல் குடம்பைத் தூங்கிருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பைக்
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கட்கமழ் அலர நண்நறும் காவி
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ
வரிபுனை சிற்றில் பரிசிறந்து ஒடிப்
புலவுத்திரை உதைத்த கொடுத்தாள் கண்டல்
செம்பேர் இரணை அலவற் பார்க்கும்
சிறுவிளை யாடலும் அழுங்க.
நினக்குப்பெரும் துயரம் ஆகிய நோயே".

-நற்றிணை: 122

ஆற்றுப்பள்ளத்தாக்கில் :

ஆற்றுப்பள்ளத்தாக்கில் மக்கள் நடத்திய வாழ்க்கை முறையினைப் பின்வரும் பாக்களிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்: