பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

273


உண்பதற்கு ஏற்ப நன்கு தீட்டப்பட்ட அரிசியால் ஆன சோற்றுத் திரளைக், கை நிறைய வாங்கி வாங்கி உண்டு முடித்து, நீர் நிறைந்திருக்கும் நன்செய்யில், நாற்றுக்களை நட, உன்னோடு தொழிலாற்றும் நாற்று நடுவாருடன் நீ செல்கின்றனை".

மலைகண் டன்ன நிலைபுணர் நிலப்பின்
பெருநெல் பல்கூட்டு எருமை உழவ !
கண்படை பெறாது, தண்புலர் விடியல்
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
கவர்படு கையை கழும மாந்தி
நீருறு செறுவில் நாறுமுடி அழுத்த நின்

நடுநரோடு சேறி’’.
-நற்றிணை : 60 : 1 . 8

உழவர் மகளின் அன்றாடக் கடமை, உணவு சமைத்தல் ஆகும். அவள் காதலன், அவள் பெற்றோரின் விருந்தோம்பும் பண்புக்கு ஏற்ப, அம் மனைபுகும் விருந்தினருள் ஒருவனாகச் சென்று, தன் காதலியைக் கண்டு மகிழ்வதோடு, உழவர் வாழ் சிற்றுார்களின் மனை வாழ்க்கையின் மாண்பு எத்தகையது என்பதை நாம் அறியவும் செய்துள்ளான்;

வளைந்து நீண்ட கொம்புகளையுடைய எருமையின் தளர்ந்த நடையுடையவாய இளம் கன்றுகள், வீட்டுத் தூண்கள் தோறும் கட்டப்பட்டுக், காண்பதற்குக் களிப்பூட்டும் நல்ல மனையின் கண், வளைந்த குண்டலங்களைக் காதில் அணிந்துகொண்டிருக்கும், செழித்த உடல் நலம் உடையவளாகிய நம் காதலி, சிறிய கல்மோதிரம் செறிக்கப்பட்ட மெல்லிய விரல்கள் சிவந்து போகுமாறு, வாழையின் குளிர்ந்த இளம் தண்டை, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அடிசில்ஆக்குதலால், புகைபடிந்து சிவந்த கண்களை உடையளாகி, அழகு உண்டாகுமாறு, பிறைவடிவான நெற்றி

த.வ.-18