பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

283


‘’எருதே இளைய ; நுகம் உண ராவே;
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே;
அவல் இழியினும், மிசை ஏறினும்
அவனது அறியுநர் யார்? என உமணர்
கீழ் மாத்து யாத்த சேம அச்சு’’

-புறம் 102 : 1.5.

உப்பு வண்டிகள் ஒழுங்காகச் செல்வது, இளம் சிறார்களுக்குக். களிப்பூட்டும் கண்காட்சியாம். இனிய நீர் நிறைந்து, மிக்க அழகுடையதான சுனையில் பூத்த செங்கழுநீரின் மொட்டு அவிழ்ந்த மலர்ந்த மலர்களைப் புற இதழ்களை நீக்கிவிட்டு முழு மலர்களால் ஆன ஆடை அசையும் அல் குலையும், பேரழகு வாய்ந்து அருள் ஒழுகும் கண்களையும், இனிய இள நகையினையும் உடைய இளமகளிர், புல் நெருங்க முளைத்துக் கவர்த்த வழியினையும், நெருங்க முள்வைத்துச் செய்த வேலியினையும். பஞ்சு நிறைந்த முற்றத்தினையும் உடைய வீட்டின் ஒருபால் உள்ள பீர்க்கங் கொடியும், சுரைக் கொடியும் படர்ந்து கிடக்கும், ஈச்ச மரத்து இலைகளையும். கொண்ட குப்பை மீது ஏறி நின்று, உமணர் வண்டிகளை, ஒன்று, இரண்டு என எண்ணிக்கொண்டிருக்கும் காட்சி" ஒன்று புறநானுற்றுப் பாடல் ஒன்றில் இடம் பெற்றுளது.

‘’தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்துஎழில் மழைக்கண்; இன்னகை மகளிர்,
புன்முக கவலைய முள்மிடை வேலிப்
பஞ்சு முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்'
ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர்
உப்பொய் ஒழுகை எண்ணும்.‘’

- புறம் 116 , 1-8