பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

தமிழர் வரலாறு

ஒரு நிலத்திலிருந்து ஒரு நிலத்திற்கு உப்பைக் கொண்டு செல்வது இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்றது என்றால், மற்றப் பண்டங்கள், அதைவிட மிகப் பெரிய அளவில் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும் என உறுதியாக நம்பலாம். அவ்வாறே, அரிசியும் பருத்தி ஆடைகளும் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வறண்ட பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன : பயறு வ்கைகளும் பால்படு பொருள்களும் முல்லைப் பகுதியிலிருந்து நன்செய் நிலப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. தினை, தேன், மற்றும் மலைபடு பொருள்கள், மற்றப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இப்பண்டங்கள், முல்லை, குறிஞ்சி போலும் மேட்டு நிலமும், தாழ்வான நிலப்பரப்பும் இணையும் இடங்களில், பெருமளவில் பண்டமாற்றம் செய்யப்பட்டன. அத்தகு பண்டமாற்றுமிடங்களெல்லாம் பெரு நகரங்களாக வளர்ந்துவிட்டன.

ஆகவே, வறண்ட நிலமாம் புன்செய் நிலப்பகுதியிலும், நீர்வளம் மிக்க நன்செய் நிலப்பகுதியும் இணையும், அதாவது, ஆறு, தன் இடைநிலைப் போக்கைக் கைவிடுத்து, சம நிலத்தில் அமைதியாக ஒடத் தொடங்கிய இடத்தில், முதன் முதலாக நகரங்கள் எழலாயின. சோழர் தலைநகர் உறையூர், சேரர் தலைநகர் கரூர், பாண்டியர் தலைநகர் மதுரை ஆகிய பழம்பெரும் நகரங்களின் தோற்றத்திற்கு இதுவே காரணம்: இந்நகரங்கள், பருத்தி விளையும் பகுதிகளிலிருந்து பருத்தி கொண்டு வரப்பட்டு, எங்கு ஆடையாக நெய்யப்படுமோ, அந்த இடங்களில், இன்றே போல், பண்டும், ஆடை நெசவுக்குப் பெயர் பெற்றிருந்த இடங்களில், இடம் பெற்று உள்ளன. இவ்விடங்களில் வளர்ந்து பெருகிய வாணிகம், தமிழரசர்களின் தலைநகராம் பெருமையை, அந்நகரங்கள் தொடக்கத்திலேயே பெறத்துணை புரிந்தன. இந்நகரங்கள் குறித்த விளக்கம் பழம்பாடல்களில் இடம் பெறவில்லை.

முக்கிய துறைமுகங்கள் :

இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெளி நாட்டு வாணிகம், அடுத்த நூற்றாண்டில் பெரிபுளுஸ் ஆசிரிய