பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு ... கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

297


வேட்டை நாய்கள் பயன்படுத்தப்படுதலை, "உயர்ந்த நாகமரங்கள் அடர்ந்து. கடந்து செல்வதற்கு அரிதாகி விட்ட கவர்த்த காட்டு வழியில், சிறிய கண்ணும் பெரிய சினமும் உடைய ஆண் பன்றி, சேற்றில் வீழ்ந்து புரண்டதனால் சேறு பூசப் பெற்ற முதுகில் புழுதியும் படிந்திருக்க அக்கோலத்தோடு விரைந்து ஓடி, சுருக்குவலை விரித்த பிளப்பில் வீழ்ந்து பட்டதாக, அதுகண்ட அளவே, வேட்டை நாய்கள், கூட்டமாக விரைந்து, வலையை அழித்து, பன்றி மீது பாய்ந்து கொன்று கொண்ட இறைச்சிபோக, எஞ்சிய இறைச்சியைக் கானவர் கொண்டு செல்வர் என்ற நற்றிணை, விளக்கமாகக் கூறியுளது :

‘’போகிய நாகப் போக்கரும் கவலைச்,
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒறுத்தல்
சேறாடு இரும்புறம் நீறொடு சிவண,
வெள்பசிப் படீஇயர், மொய்த்த வன்பு அழீஇக்
கோணாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்கும் சிறு குடி.‘’

-நற்றிணை: 2:6-11)

வேட்டுவர், காட்டில் வாழ்பவராகவும், விரைந்தோடும் மான் கூட்டத்தையும். துரத்தித் தொலைக்க வல்ல விரைவினையுடைய கடுஞ்சின நாய்களை உடையவராகவும் கூறப்பட்டு, உள்ளனர். கானுறை வாழ்க்கைக் கத நாய் வேட்டுவன் (புறநானூறு : 33 : 1) மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கத நாய்....வேட்டுவன்’’. (புறம் : 205 : 8.9) வேட்டைக்குச் சென்ற தலைவன், வேட்டை முடிவுற்றதும், வேட்டை மேற்கொண்டு மூங்கிற்காட்டினுள் நுழைந்து பரவிக் கிடக்கும் தன் வேட்டுவத் துணைவர்களையும், வேட்டை நாய்களையும், வேட்டை முடிவுற்றது, வாருங்கள் என அழைக்கும் குறிப்போடு, கொம்பு எனும் ஊது கருவியை ஊதி ஒலி எழுப்புவன்: