பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

தமிழர் வரலாறு

சமஸ்கிருத எடுத்துக்காட்டுக்கள் உள்ள, பல இலக்கிய வடிவங்களை விவரித்துக்கூறியுள்ளார். இவையும், இவை போலும் பல இடங்களில், தமிழுக்கு உரியன அல்லாதனவற்றைத், தமிழ்ப்பாக்கள் குறித்த தம்முடைய இலக்கணத்தில் புகுத்தியுள்ளார். அதனால், தொல்காப்பியர் இவ்வாறு செய்யுமிடங்களில், அவருடைய உரையாசிரியர்களால், அவர் கூற்றிற்குத் தேவையான எடுத்துக் காட்டுகளைத் தமிழிலிருந்து காட்ட முடியாமல் போவது வியப்பினைத் தருவதில்லை. தொல்காப்பியர், தமிழில் புகுத்தும், மற்றும் இரு ஆரியக் கொள்கைகள் பற்றி அவருடைய காலம் குறித்த ஆய்வின் போது தெளிவாகக் கூறப்படும். -

தமிழில் சமஸ்கிருதச் சொற்கள் நுழைவு :

அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், தமிழ் நெடுங் கணக்கு ஒலி முறையில் வழங்கப்பட்டுவிட்ட சமஸ்கிருதச் சொற்களாம் தத்பவச் சொற்கள் சிலவற்றைத் தமிழில் புகுத்திவிட்டனர். அவ்வகைச் சொற்கள் இடைக்கால உரையாசிரியர்களின் உரையில் எடுத்தாளப்பட்டிருக்கும் அகத்தியச் சூத்திரங்களிலும் தொல்காப்பிய இலக்கணத்திலும் காணப்படுகின்றன. ஆனால், இலக்கண விதிகளைக் குறிக்க வல்ல மரபுச்சொற்களில் பெரும்பாலனவற்றிற்குத் தமிழ்ச் சொற்களைக் காணுமளவு, தமிழின் சிறப்பினை அகத்தியனார், மதித்திருந்தார். கிடைத்திருக்கும் பழைய தமிழ் இலக்கியங்களில், சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்று வழங்கப் பட்டிருக்கும் சொற்கள் மிகமிகக்குறைவு அல்லது அறவே இல்லை. ஆனால், காலம் செல்லச்செல்ல ஒரு பாடலில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களின் சதவிகிதம், அப்பாடலின் காலத்தை உணர்த்தும் அறிகுறியாம் எனக் கொள்ளுமளவு, அச்சொற்களின் நுழைவு, படிப்படியாகப், பெருகிக்கொண்டே வந்துளது. இவ்வாறு, சமஸ்கிருதச் சொற்கள், தமிழில், மேலும் மேலும் இடம் பெற்று வந்தன என்றாலும், தொல்காப்பியப் பொருளதிகாரத்துப் பெரும் பகுதிக்கருப்பொருளாக இருக்கும் தமிழிலக்கிய மரபுகள்,