பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

தமிழர் வரலாறு

விளக்கில் துஞ்சும், பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே.‘’ (புறம் : 2 : 23-24) அகம், புறம் என்ற இரு தொகை நூல்களில் பொதியமலை, பாண்டியர்க்கு உரியதாக, ஏழு பாக்களில் விளக்கப்பட்டிருக்க, அதை, அகத்தியர்க்கு உரியதாக்கும் குறிப்பு எதுவும் அவற்றில் இல்லை. அகத்தியனார் காலம், தொகை நூல்களில் மிகப் பழையனவாய, அந்நான்கு தொகை நூல் பாக்களுக்கு, நனிமிக அண்மையானது. ஆகவே, அவை, அவரை, மக்களுள் ஒருவராக, ஒர் இலக்கண ஆசிரியராகப் பார்த்ததே அல்லது, ஒரு ரிஷியாக மதிக்கவில்லை என்ற உண்மையே, இதற்குக் காரணமாதல் கூடும்.

பாண்டியன் நெடுஞ்செழியனின் அன்புக்குரிய புலவர் மாங்குடி மருதனார் (கி. பி. 450) அவனைப் பாராட்டிப் பாடிய மதுரைக் காஞ்சியில், ஒரு பகுதி உரையாசிரியர் நச்சினார்க்கினியரால், அது, அகத்தியரைக் குறிப்பதாகக் காட்டுமளவு சிதைக்கப்பட்டுள்ளது. அது, நெடுஞ்செழியனைப் பார்த்து, ‘’பக்க மலைகளில் வீழ்ந்து ஒடும் அருவிகளைக் கொண்ட மலைக்கு உரியவனே! தென்னவர்களை ஒட்டியவனும், அணுகுவதற்கு அரிய ஆற்றல் வாய்ந்தவனுமாகிய பழம் பெரும் கடவுளுக்கு, அடுத்து இருக்க விரும்புவோனே!‘’ எனப் பாராட்டுகிறது:

‘’தென்னவன் பெயரிய துன்னரும் துப்பின்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பின் பொருந!‘’

--மதுரைக்காஞ்சி : 40-42

இப்பகுதி, பொருள். தெளிவு காணமாட்டாது உளது: ‘’தென்னவன்‘’ என்பது இராவணனைக் குறிக்கும் என்றால், இராமனுக்கு அடுத்தவனாக இருக்க விரும்பினான் நெடுஞ்செழியன் என்பது பொருளாதல் வேண்டும். ஆனால், இராவணனைத், தென்னவன் எனக் குறிப்பிடும் ஒரே ஒரு குறிப்பு, அதுவும் மிகவும் பிற்பட்ட பாட்டு ஒன்றில் உளது;