பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

தமிழர் வரலாறு

பிற்பட்ட காலத்தவை என்பதை உறுதி செய்வனவும், முச்சங்கங்கள் குறித்த அப்பழங்கதைப்படி , அச்சங்கங்கள் இருப்பதே மறைந்துவிட்ட காலத்திற்கும் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டனவுமாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற அவ்விரு காப்பியங்களுக்கும், சங்க இலக்கியம் என்ற தொடரை நீட்டிப்பதன் மூலம், இன்றைய எழுத்தாளர், அத்தொடரை மேலும் பொருளற்றதாக ஆக்கிவிட்டனர். பழைய பாடல்களுக்கு வழங்கப்பட்ட மரபு வழிப்பெயர், அறிவார்ந்த, பெரியார்களின் பாக்கள் எனும் பொருளுடையதான "சான்றோர் செய்யுள்'" என்பதாம். அவ்வாறே, பிற்காலப் பாக்களுக்கான மரபு வழிப்பெயர், பிற்காலப் பெரியோர்களின் பாக்கள் எனும் பொருள் உடையதான, பிற சான்றோர் செய்யுள் என்பதாம். இப்பெயர்கள், பொருத்தமுடைய பெயர்களாம்.

["சங்கமலி தமிழ்", "சங்கமுகத் தமிழ்'" எனும் தொடர்கள், முற்றிலும் வேறுபட்டனவாம். அவை பின்னர் ஆராயப்படும்.]

முச்சங்கங்கள் பற்றிய பழங்கதை, முதலில் கூறப்பட்டிருப்பது எங்கே ?

இக்கதை, முதன் முதலில், இறையனார் என்ற ஒருவர், அறுபது சூத்திரங்களில் கூறிய காதற்பாட்டு இலக்கணமாம். அகப்பொருள், உரையில் கூறப்பட்டுளது.

[இன்றைய எழுத்தாளர் பலராலும் இந்நூல், "களவியல்" என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்நூல், களவுக்காதலை விளக்கும், "களவியல்", மண வாழ்க்கை முறையை விளக்கும், "கற்பியல்" ஆகிய இரு அதிகாரங்களைக் கொண்டிருப்பதால், அதை, அவற்றுள் ஒரு பெயரால் அழைப்பது பொருத்தாது: "அகப்பொருள்" என்பதே பொருந்தும் பெயராம்.]