பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 341

பேரிசையும் என்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும் என்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது. ஆயிரத்து எண்ணுற்று ஐம்பதிற்றியாண்டு என்ப, அவர்களைச் சங்கமிரீஇபினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக, நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங் கேறினார் மூவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை என்ப".

முச்சங்கப் பழங்கதை பற்றிய திறனாய்வு :

 இத்தொடர்களில் அடுத்தடுத்து வரும் ' என்ப' என்பது  என்று ஒருவர் கூறுவர்' எனும் பொருளுடையதாகும். [அந்த ஒருவர், ஆசிரியரால் நன்கு மதிக்கத்தக்காரும் பொதுவாக அவர் ஆசிரியருமாவர்.) என்ப என்ற அது தொடர்ந்து வரும் மரபுவழி நிகழ்ச்சியை உணர்த்துவதாகாது. இதில் கூறப்பட்டிருக்கும் சில செய்திகள் மேலெழுந்தவாரியாக நோக்கினும் நம்புதற்கு இயலாதன : சில நகைப்பிற்கு உரியன. மூன்று சங்கங்களுக்கும் ஒதுக்கப்பட்ட ஆண்டுகள், அச்சங்கங்களுக்குக் கூறிய கால் நீட்சியால் மட்டுமல்லாமல், அவ்வெண்களுக் கிடையே காணப்படும் ஒரே மாதிரித் தன்மையாலும் நம்பக்கூடியனவாக இல்லை. ஒவ்வொரு சங்கத்திற்கும் கூறிய ஆயுட்காலம் 37-ன் பெருக்குத் தொகையாக அமைகிறது. அவற்றின் மொத்த ஆயுட் காலம் முறையே, 37×120=4440; 37×100=3700;37×50=1850. இது, அவ்வெண்கள் எத்துணைச் செயற்கையானவை என்பதைக் காட்டுகிறது. மற்றுமொரு காரணத்தாலும், இவ்வெண்கள் நம்பத்தக்கனவாக இல்லை. அப்பழங்காலத்தில் உண்மையில் கூறப்போனால், எட்டாம் நூற்றாண்டு வரை, கிறித்துவ ஆண்டு போலும், ஆண்டுக் கணிப்பு முறை, தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை. அல்லது பின்பற்றப் படவில்லை. ஆகவே, ஆண்டுகளைப் பெருமெண் அளவில் எண்ணிக் காணும் வழிமுறை இடம்பெறவில்லை.