பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

தமிழர் வரலாறு

வந்தன என்பதை உணர்த்தும், ஒரு சொல்லோ, அல்லது ஒரு தொடரோ இடம்பெறவில்லை அப்படி ஏதேனும் ஒன்று இருந்திருக்குமாயின், அது, தன் பேராண்மையைத் தானே புகழ்ந்துகொண்டு, ஒருக்கால், தன் பகைவரை வெற்றி கொள்ளத் தவறுவனாயின், தன் நாட்டு: எல்லையை, உயர்ந்த புகழும், சிறந்த புலமையும் வாய்ந்த மாங்குடி மருதன் தலைவனாக, உலகம் இருக்குமளவும் இருக்கும் பெரும்புகழ் வாய்ந்த புலவர்கள், பாட மறுத்து விடுவார்களாக என்பன போலும் இழப்புக்களை விரும்பி வரவேற்றுத், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடிய பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருநன் தலைவன் ஆக, உலகமொடு நிலைஇய, பலர்புகழ் சிறப்பின் புலவர், பாடாது வரைக என் நிலவரை"

        -புறம் : 72 : 13 - 16

அப்பாட்டு, சங்கம் என்ற ஒன்றைக் குறிப்பிடவில்லையாகவே, அத்தகையது ஒன்று, இருக்கவில்லை அல்லது நெடுஞ்செழியன் காலத்தில், சங்கம் என்ற சொல், அரசவைப் புலவர் குழுவின் பெயராக வழங்கப்படவில்லை என்று நாம் கொள்ளலாம்: இதற்கிடையில், மூன்றாவது சங்கம் என ஒன்றிருந்திருந்தால், அதன் தலைவர் நக்கீரராவர் என்ற, பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நம்பிக்கையின் பொய்ம்மையைக் காட்ட, மேலே கூறிய நெடுஞ்செழியன் கூற்று. துணை புரிகிறது: என்றும் கூறிவிடலாம்.

மூன்று தலை நகர்கள் :

முச்சங்கங்கள் பற்றிய அக்கதையில், அடங்கியிருக்கும், பாண்டிய மன்னர்கள். தங்கள் தலைநகரை இருமுறை இடமாற்றிக் கொண்டனர் என்ற செய்தியை நம்ப மறுப்ப