பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16ஆம் அதிகாரத்தின் பின் இணைப்பு


“தலை, இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் என்பன வெறும்
கற்பனை அல்லது உ ணமை நிகழ்ச்சிகள் ஆகா”
எனல் பொருந்துமா ?


ஆரியர்கள், விந்தியத்தைக் கடந்து தெற்கே குடி பெயர்ந்ததற்கான குறிப்பு, இருக்கு வேதத்தில் இல்லை; முறையே சூரிய, சந்திர அரச வம்சங்களைத் தோற்றுவித்த, இக்குவாகு புரூரவர் காலத்துக்கு நூறு அரச தலைமுறைகளுக்குப் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்ட ஐத்திரேய பிராமணாவில்தான் ஆரியர் விந்தியத்தைக் கடந்தது முதன் முதலில் குறிப்பிடப்பட்டுளது; என்றாலும், ஐத்திரேய பிராமணம், இந்த நூறு அரச ஆண்டு காலத்துக்கு முன்பிருந்தே, காலவெள்ளத்தில் மிதந்து வந்த செய்திகளையே குறிப்பிடுகிறது. ஆதலின், அது குறிப்பிடும், ஆரியர் விந்தியத்தைக் கடந்தது, அது எழுதப்பட்ட காலத்தில்தான் நடைபெற்றது எனக் கொள்வது பொருந்தாது. மாறாக, நூறு அரச தலைமுறைகளுக்கு முற்பட்ட காலத்திலேயே அது நடந்துவிட்டதாகவே கொள்ள வேண்டும்.” (தமிழர் வரலாறு : பக்கம் : 33)

புத்த ஜாதகக் கதைகள், கி.பி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்றாலும், அக்கதைகள் கூறும் நிகழ்ச்சிகள், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலும், அதற்கும் முற்பட்ட காலத்திலும், நாடோடிப் பாடல்களில் கூறப்பட்டு வந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாகும். ஆகவே, அக்கதைகள் கூறும் நிகழ்ச்சிகளை, அக்கதை எழுதப்பட்ட கி. பி. நான்காம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளாகக் கொள்வது கூடாது. மாறாக, கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளாகவே கொள்ளுதல் வேண்டும்;” (தமிழர் வரலாறு பக்கம் 125)