பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்


6) பாண்டியன் மாறன் வழுதி (நற்றிணை : 67, 301) 7) அறிவுடை நம்பி (நற் : 15, குறுந் : 230 ; அகம் : 378) 8) பாண்டியன் பன்னாடுதந்தான் (குறுந் : 270) 9) மாலை மாறன் (குறுந் : 270) 10) பூதப்பாண்டியன் பெருங்கோப் பெண்டு (புறம் : 246) 11) அண்டர் மகன் குறுவழுதி (குறுந் : 345 : அகம் : 150, 228) (பக்கம் : 235)

முச்சங்கங்கள் இருந்தன என்பது நம்ப இயலாத ஒன்று என்ற தம் கருத்துக்குத், திருவாளர் பி. டி. எஸ். அவர்கள் காட்டும் காரணங்களுள் ஏழாவது காரணம் இது.

பாண்டியர் குலப்புலவர்கள், இப்பதினொருவர் மட்டும் அல்லர் : பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் (குறுந் : 156; அகம் : 373) நல்வழுதியார் (பரிபாடல் 12) என்ற மேலும் இருவர் கூட உள்ளனர்.

கடைச்சங்கம் நிறுவிய பாண்டியர் நாற்பத்தொன்பதின்மரில், கவியரங்கேறினார் மூவர் எனக் கூறும் அதே களவியல் உரை, கடைச்சங்கம் இருந்து தமிழாராய்ந்த புலவர்கள் நாற்பத் தொன்பதிமர் என்றும், அவர்கள் உள்ளிட்டு நானுாற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்றும் கூறுகிறது. அந்த 449 புலவர்கள் பாடியவற்றுள், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் அடங்கியுள்ளன (பக்கம் : 231) ஆனால், இந்தக் கூத்து, வரி, சிற்றிசை, பேரிசைகளைப் பாடிய புலவர்களைக் கணக்கில் கொள்ளாது, ஏனைய கடைச் சங்க நூல்களைப் பாடிய புலவர்களை மட்டும் கணக்கிட்டால், அவர்கள் நானுாற்று எழுபதின்மர் உள்ளனர். கூத்து, வரி, சிற்றிசை, பேரிசைகளையும் பாடிய புலவர்களையும் சேர்த்துக் களவியல் உரை கூறும் புலவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், இருபத்தொரு புலவர் அதிகமாக உள்ளனர்.

ஆக, இதுபோலும் எண்ணிக்கையில், சிறுசிறு தவறுகள் இடம் பெற்றுவிடுவது இயல்பே, அது கொண்டே முச்சங்க அமைப்பில் ஐயம் கொள்வது வலுவான வாதமாகாது;