பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 395.

அச்சொற்கள் உணர்த்தும் பொருள்களையும், ஐயம் திரிபு அற: ஆராய்ந்து முடிவு காணவல்ல பேரறிவாளர் கூட்டத்தால், மேலும் விரிவும் விளக்கமும் பெறும். 'கற்றறிந்தார் கல்வி விளங்கும் : கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து', -குறள் : 717

கற்றவர்கள் கூடியிருக்கும் அவையில், ஒருவர், தாம் கற்ற கல்விச் செல்வத்தை, அக்கற்றவர்கள் அனைவரும் ஒருமுகமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்ல வல்லராயின், அவர், கற்றவர் எல்லாரினும், மிகக் கற்றவர் என உலகத்தவரால் போற்றப்படுவர். 'கற்றாருள் கற்றார் எனப்படுவர் ; கற்றார் முன் கற்ற செலச்சொல்லு வார்’ குறள் : 722

கற்றவர்கள் கூடிய அவையில், தாம் கற்ற கல்வி நலத்தை, அக்கற்றவர்கள் ஏற்குமாறு விளங்கச் சொல்லித் தம்மினும்: மிகக் கற்ற அக்கற்றவர்களிடம் காணலாம் மிக்க அறிவு நலத்தைப் பெற்றுக் கொள்வாராக. 'கற்றார்முன் கற்ற செலச்சொல்லித், தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்' - குறள் : 724 மேலே எடுத்து வைத்த மூன்று குறட்பாக்களின் பொருளை உணர்ந்தார் ஒவ்வொருவரும், திருவள்ளுவர் காலத்துக்கு முன்னரே, கசடறக் கற்றுத் தேர்ந்த முதியோர் பலரும் ஒன்று கூடியிருக்கும் ஓர் அமைப்பு இருந்தது என்பதையும், புதிதாகக் கற்றுத் தேரும் ஒவ்வொருவரும், இம்முதிய கல்வியாளர் முன்னர்த் தாம் கற்ற கல்வி நலத்தை எடுத்துரைப்பதன் மூலமும், அம் முதிய கல்வியாளர் பால் காணலாம் மிக்க கல்வி நலத்தைத் தாம் பெறுவதன் மூலமும், அவர் கல்விச் செல்வமும் மேலும் செழுமை பெற ; கற்றவர் எல்லாரினும் மிகக்கற்றவர் என்ற பெருமையினை அவரும் ஏற்கத்தக்க வழக்காறு நடைமுறையில் இருந்து வந்துளது.