பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 399

திருவாளர். பி, டி. எஸ். அவர்கள். அதனால், "தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டில் வரும், 'மாங்குடி மருதன் தலைவனாக' என்ற தொடர், மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நக்கீரர் என்ற நம்பிக்கையின் பொய்ம்மையைக் காட்ட துணை போவதாகிறது" (பக்கம் : 239) எனக் கூறவேண்டிய அவல நிலைக்கு ஆளாகிவிட்டார். திருவாளர், சீனிவாச அய்யங்கார் அவர்கள்.

ஆக, மேலே எடுத்துவைத்திருக்கும் விளக்கங்களால், பத்துப்பாட்டு எட்டுத்தொகைப் புலவர்கள் காலத்தில், புலவர்கள் கூடிய பேரவை ஒன்று இருந்தது என்பதும், அப்பேரவைக்கு அவ்வப்போது தலைமை தாங்கிய, சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனார், நக்கீரர் முதலாம் நாற்பத்தொன்பது புலவர்களில் ஒருவராகத், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில், மாங்குடி மருதனார் தலைமை தாங்கியிருந்தார் என்பதும், தெளிவாக்கப்பட்டன.

அதுமட்டுமன்று: மூவேந்தர் தலைநகர்களாக, முறையே வஞ்சியும், உறந்தையும், மதுரையும் இருப்பினும், தமிழால் பெருமை பெற்றது என்ற சிறப்பினைப், புலவர்கள், மதுரைக்கு மட்டுமே வழங்கியுள்ளனர். காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவர், குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்ற சோழனையும், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்ற பாண்டியனையும் ஒரே பாட்டில் ஒருசேர வைத்துப் பாராட்டும் நிலையில், தாம் பிறந்த மண்ணுக்குரிய சோழன் தலைநகரை "அறந்துஞ்சு உறந்தை" என்று மட்டுமே பாராட்டிவிட்டு, பாண்டியர் தலைநகரைத் 'தமிழ் கெழுகூடல்' என, மதுரையின் தமிழ் மணக்கப் பாராட்டியிருப்பது காண்க (புறம் 58) அதுபோலவே முடியுடை வேந்தர் மூவரையும், வள்ளல்கள் எழுவரையும் சிறுபாணாற்றுப்படையாம்