பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதக்கலி

மூன்று தமிழ்ச் சங்கங்கள் படுவதல்லது, பகையரசர் தம் படை வெள்ளத்தால் மோதப் படுவதை அறியாத மதுரை, என மதுரையின் பெருமை பாராட்ட வந்த நிலையில் வைகையைக் குறிப்பிடும்போது, புலவர்களின் பாக்களாம் புகழினைப் பெற்ற வையை, "புலவர்வாய்ச் சிறப்பெய்தி இருநிலம் தார் முற்றியது போலத் தகைபூத்த வையை’’ எனக் குறிப்பிட்டுள்ளார். பிறிதோரிடத்தில் ( மருதக்கலி : 3-5) மதுரையைக் குறிப்பிடுங்கால், நல்லன அல்லாத சொற்களை என்றும் கேட்டறியாத காதுகளாகிய விளை நிலத்தில், பழம்பெரும் புலவர்கள் பாயவிட்ட பழம்பெரும் பாடல்களாம் நீர்பாய, நாவளம்மிக்க நாவாகிய ஏர் கொண்டு உழும் உழவராம் புலவர் பெருமக்கள் புத்தம் புதிய பாக்களை விளைவித்து உண்டுவாழும், வையையின், வெள்ளத்தால் சூழப்பட்ட மதுரை எனக் குறிப்பிட்டுள்ளார். "வல்லவர், செதுமொழி சீத்த செவி செறுவாக, முதுமொழி நீராப், புலன் நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனலூர்."

  மதுரை மாநகரில் இடம் கொண்ட புலவர் தம் பேரவையை, இளநாகனார் பாராட்டியுள்ளார் என்றால், அவர் மதுரை மண்ணின் மகன் : ஆகவே, அதில் தற்புகழ்ச்சியாக, இல்லாத ஒன்றைக் கூறியிருக்கவும் கூடும் என வாதிட்டு, அந்த அகச்சான்றுகளில் குறை காணவும் கூடும்.
   
              
 பாண்டியரின் குலப்பகைவர்களில் ஒருவர் சேரர் ;அச்சேரர் குலத்து வந்த பெருங்கடுங்கோ என்ற பேரரசனே மதுரை மாநகரையும், அம்மாநகர் வாழ் பெருமக்கள், புலமை நலம் சான்ற தம் நாவில் பிறக்கும் புதுப் புதுப் பாடல்களில் பொதிந்து கிடக்கும் சொல்லின்பம், பொருள் இன்பங்களை உளங்கொண்டு மகிழும் காட்சி நலத்தையும் கனி கூர்ந்து பாராட்டியுள்ளார், தம்பாட்டு ஒன்றில்,
த.வ.-26