பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416

தமிழர் வரலாறு

தன் காதலனைத் தன் மனையில் இரவு தங்கிச் செல்லுமாறு அழைக்கிறாள். "கீழ்க்கடலிலிருந்து எழுந்து, நல்ல செந்நிறக் கதிர்களைப் பரப்பிப் பகற்பொழுதை ஒளிமயமாக்கிவிட்ட ஞாயிறு மேற்கு மலையில் மறைந்துவிடும், துன்பத்தைத் தூது போல் முன்போக்கிப் பின்னர் வந்து தங்கிவிட்ட துயர்தரு மாலைப்பொழுதை, ஒளிவீசும் வளை அணிந்த மகளிர் தத்தம் மாளிகைகளில், எதிர்கொண்டு வரவேற்க, மீன் கொழுப்பை உருக்கி எடுத்த நெய்வார்த்து ஏற்றிய ஒளிவிளக்குகளின் பேரொளி வீசும், நீல நிறக்கடலில் எழும் அலைகள் மோதும் கரையிடத்தே உள்ள, ஆரவாரப் பேரொலி எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் எம் பாக்கத்தில் இன்று இருந்து, எம்மனையில் எம்மோடு தங்கியிருப்பின், உனக்கு ஏதேனும் குறைபாடு உளதாமோ?சிவந்த நூலால், வளைத்து. வளைத்து முடியிட்டுச் செய்த அழகிய வலை கேடுற்றுப் போமாறு அறுத்துக்கொண்டு ஓடிவிட்ட, எதிர்ப்படும். எதையும் கொல்லவல்ல சுறாமீனைத் தம் வல்லமையெல்லாம் காட்டி, அகப்படுத்திக் கொள்ளாது எம் சுற்றத்தார் வறிதே,வருவார் அல்லர்;ஆகவே தங்கிச் சென்மோ";

'குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப் பகல்கெழு செல்வன் குடமலை மறையப் புலம்புவந்து இறுத்த புன்கண் மாலை இலங்குவளை மகளிர் வியன்நகர் அயர, மீன்நிணம் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர், நீல்நிறப் பரப்பில் தயங்குதிரை உதைப்பக் கரைசேர்பு இருந்த கல்என் பாக்கத்து இன்றுநீ இவணை ஆகி, எம்மொடு தங்கின் எவனோ? தெய்ய ; செங்கால் கொடுமுடி அவ்வலை பரியப் போகிய கோட்சுறாக் குறித்த முன்பொடு வேட்டம் வாயாது எமர் வா ரலரே” -நற்றிணை: 215