பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/442

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்கள் வாழ்க்கை கி.பி. ... ஆண்டுகள்

417

நெய்தல் நிலத்து மக்களின் வாழ்க்கை வாய்ப்புகள்,ஒரு பாட்டில் விளக்கப்பட்டுள்ளன. "நெல்லை அறுவடை செய்யும் பெரிய உழவர், செங்கதிர் பரப்பிக் காயும் ஞாயிற்றின் வெயில் வெப்பம் தாங்கமாட்டாத போது, தெளிந்த கடல் நீரில் பாய்ந்து களை தீர்வர். திண்ணிய மீன்பிடி படகாம் திமிலை உடைய வலிய பரதவர், உண்டார்க்கு உரம் ஊட்டும் மதுவுண்டு, இனிய குரவைக் கூத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடித் திளைப்பர்; கடல் அலைகள் தூவும் தூவலால் தழைத்து வளர்ந்து புன்னையின் தேன் நிறைந்த மலர்களால் ஆன மாலை அணிந்த ஆடவர், ஒளிவீசும் வளை அணிந்த மகளிர்க்கு நீராடலில் வலக்கை கொடுத்து உதவுவர் வண்டுகள் வந்து மொய்க்க மலர்ந்த,குளிர்ந்த நறுமணமே நாறிக்கொண்டிருக்கும் கானலில் தழைத்திருக்கும் கடல் முள்ளி மாலை அணிந்த வளை அணிந்த மகளிர், வானளாவ வளர்ந்திருக்கும் பனையின் நுங்கின் இனிய நீரும், பொதிவுற வளர்ந்திருக்கும் கரும்பின் சாறும், மணல் மேட்டில் நிற்கும் தென்னையின் இனிய இளநீரும் ஆகிய மூன்று நீரையும் கலந்து குடித்துவிட்டு, மழைநீர், ஆற்றுநீர், ஊற்று நீர் என்ற முந்நீராம் கடல் நீரில் பாய்ந்து ஆடுவர்".

“நெல் அரியும் இருந்தொழுவர்,
செஞ்ஞாயிற்று வெயில் முனையின்,
தெண்கடல் திரைமிசைப் பாயுந்து:
திண்திமில் வன் பரதவர்
வெப்புடைய மட்டு உண்டு
தண்குரவைச் சீர்துங்குந்து:
தூவல் கலித்த தேம்பாய் புன்னை
மெல்இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்;
எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து,
வண்டுபட மலர்ந்த தண்நறும் கானல்
முண்டகக் கோதை ஒண்தொடி மகளிர்”

த.வ-27