பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476

தமிழர் வரலாறு

இரும்பை, அழகிய மாதிரிக் காட்சிப் பொருளாக இருக்கத் தக்க சிறப்பு வாய்ந்த பல்வகைக் கருவிகளாகப் பண்ணினர். இந்திய உலோகம் அனுப்பப்பட்ட டமாஸ்கஸ் நகரில், அது, போர்க் கவசமாகவும் பண்ணப்பட்டது. (Warmington , page: 257, 58).

உரோமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் :

இப்பண்டங்களுக்கு மாற்றுப் பண்டங்களாக, உரோமானியர், முக்கியமாக நாணயங்களை அனுப்பினர். பவழம், மது, ஈயம், தகரம் ஆகியவற்றையும் அனுப்பினர், (Periplus : page : 86). ஆனால், அனுப்பியது போக, உரோம் கொடுக்க வேண்டி நின்ற பாக்கி, இந்திய வாணிகம், உரோமன் நாணயச் செலாவணியை மிகக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய அளவு அத்துணைப் பெரிதாகிவிட்டது. பேரரசுத் தலை நகரின் எதிர்கால வாழ்வின் மீது இவ்வாணிகம் செலுத்திய செல்வாக்கு, திரு. பெரிபுளுஸ் அவர்களால் பின்வருமாறு விளக்கப்பட்டுளது. மாற்றுப் பண்டமாகத் தருவதற்குத் தேவைப்படும் போதிய பண்டங்களை உற்பத்தி செய்யாமலே, கீழ் நாடுகளிலிருந்து செய்த, ஆடம்பரப் பொருள்களின், இந்த வரம்புக்கு மீறிய, ஊதாரித்தனமான இறக்குமதி தான், உரோம நாணயச் செலாவணியின் அடுத்தடுத்து ஏற்பட்ட மதிப்பிறக்கத்திற்கும், நிலை இறக்கத்திற்கும், இறுதியாக அதனுடைய முழு அழிவுக்கே கொண்டு சென்றதற்கும் தலையாய காரணமாம். நாட்டு உற்பத்திப் பொருள்களை விற்றுப் பெற்ற பொன், வெள்ளி போலும் விலை மதிக்கத் தக்க உலோகங்களின் சேமிப்பு மூலமே, உரோமின் நாணயச் செலாவணியின் தரம் நிலை நாட்டப்பட்டது. கி. பி. 272ல் செல்வப் பெருநகராம் ‘தாரென்டம்’ (Tarentum) நகரைச் சூறையாடிக் கொள்ளை அடித்தது: தன்னுடைய நாணயத்தைச் செம்பிலிருந்து வெள்ளிக்கு மாற்றிக் கொள்ள வழி செய்தது. கி. பி. 148 இல் கார்த்கே, (Carthage) கோரின்த் (Corinth) நகரங்களின் அழிவுக்குப் பிறகு, பொன் நாணயம் பரவலான வழக்கத்திற்கு வந்தது,