பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

506

தமிழர் வரலாறு

அடுத்து வந்த அறம் கூறுவோரால் வளர்க்கப்பட்டவாறும் ஆரிய நெறியில் நடத்தப்பட்டது, என்பதைக் காட்டுகின்றன. பேரரசின் உட்பிரிவுகள், அவற்றை ஆட்சிபுரிந்து வந்த அரசு அலுவலர்கள், வரிகள், நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலமாயின், அதற்கான வரிவிலக்கு ஆகிய அனைத்தும், சமஸ்கிருதச் சொல்லமைப்பு முறையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த மானியப்பட்டயம், அரசவை ஆலோசனைக் குழுவினர் ஒருவரால், அவர் கைப்பட எழுதப்பட்டது. பின்னர்ச், செப்புத் தகட்டில், செதுக்கப்பட்டது. இறுதியாக, அரசனால் பார்வையிடப்பட்டு, தன்னுடைய ஆணையாக அறிவிக்கப்பட்டு, தாரை வார்த்தல் தொடர வழங்கப்பட்டது. இப்பழைய பல்லவர்களின் காலத்தில், பிராமணர்கள், காஞ்சீபுரம் மாவட்டத்து அக்ராஹாரங்களில் குடி வாழ்திருந்தனர். அப்பட்டயங்கள் உறுதி செய்வது போல், சமயச் சார்பற்ற அலுவலகங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். முழுக்க முழுக்க ஆரியப் பழக்க வழக்கங்களான இவை அனைத்தும், தமிழ் நாட்டின் மையப் பகுதிக்கு, அது கி. பி. ஆறாம் நூற்றாண்டில், ஆரிய மயமாக்கப்படும் வரை, தெரியவே தெரியா.

சிவகந்தவம்மனுடைய பட்டயங்கள், ஆந்திர அரசர்களின் நாளிக் கல்வெட்டுக்களைப் போலவே, இலக்கியப் பாலிமொழியிலிருந்து பல்லாற்றினும். வேறுபட்டு, பிராகிருத மொழியில் அமைந்துள்ளன. இம்மொழி, காஞ்சியில், மதிக்கத் தக்க அளவான நீண்ட காலம் மக்களிடையே வழக்கத்தில் இருந்திருக்கவும், அம்மாவட்டத்து மக்களின் தாய் மொழியாம் தமிழால் ஒரளவு பாதிக்கப்பட்டிருக்கவும் வேண்டும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. ஹீரஹடகஹள்ளி ஸாஸனத்தைப் பதிப்பிக்கும்போது, திருவாளர் பூலர் (Bwhler) அவர்கள் குறிப்பிட்டவாறு, “முன்னதாகக் கொடுக்கப்பட்ட” எனும் பொருள் தருவதான “புவ்வதத்தம்” என்ற பால் உணர்த்தா அஃறிணைச் சொற்றொடர், “கொடுக்கப்பட்டுவிட்ட” எனும் பொருள் உடையதான, “சம்பத்தொ' என்ற உயர்திணை ஆண்பால் உணர்த்தும்