பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

526

தமிழர் வரலாறு

கூறியதற்குப், பதஞ்சலி காலத்தில், வட இந்திய மொழி வல்லுநர்க்குத் தெரிந்திருக்குமளவு சிறப்புற்று விளங்கி இருந்தாலும், அது தனக்கென ஒரு தமிழ்ப் பெயரைக் கொண்டிருக்கவில்லை என வாதிடுவது எவ்வாறு :பொருந்துமோ அறியோம்.

கி. மு. ஏழாம் நூற்றாண்டினராய பாணினியின் இலக்கண நூலாம் பாணினியத்திற்குக், கி. மு. நான்காம் நூற்றாண்டில் விளக்க உரை அளிக்கவல்ல சமஸ்கிருதப் பேராசிரியர் காத்யாயனரையும், கி. மு. நான்காம் நூற்றாண்டில் மெளரியப் பேரரசனாகத் திகழ்ந்த சந்திர குப்தனுக்கு அமைச்சனாக இருந்து அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியனையும் பெற்று அளித்த பெருமைக்கு உரியது காஞ்சீமாநகர் என்பது உண்மை (தமிழர் வரலாறு : 123, 135, 142, 325 பக்கங்கள் காண்க).

காஞ்சீமாநகர், அத்துணைப் பழங்காலத்தில், பல்கலைக் கழகப் பெரு நிலையமாகத் திகழ்ந்தது என்றால், அது, அப்பெருநிலையைத் திடுமென, எடுத்த எடுப்பிலேயே அடைந்திருக்க இயலாது ; அப்பெருநிலை, அம்மாநகரத்துக்கு வந்து குடியேறியவர்கள் காலத்திற்குப் பிறகே உருவாகியிருக்கவும் இயலாது அந்நிலை, அம்மாநகரத்து நிலைத்த குடியினராய, மண்ணுக்குரிய மக்களின் பலதலைமுறை இடைவிடா முயற்சியின் விளைவாகவே உருவாகியிருக்க வேண்டும். மேலும், அறிஞர்பெருமக்கள் பலரின் பிறப்பிடமாக வளர்ந்த ஒரு பெருநகர், தனக்கென ஒரு பெயரை, அது தோன்றிய காலத்திலேயே பெறத் தவறிவிட்டு, ஆங்கு வந்து குடியேறிய வடநாட்டுச் சமஸ்கிருத மொழியாளர், அவர்களின் மொழிப்பெயரால் பெயர் சூட்டும் வரை காத்திருந்தது என்பது, நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாற்று நெறியினை உணராதார் கூற்றே ஆம்,

இக்குற்றச்சாட்டு முறையான குற்றச்சாட்டு என்பதைத், திருவாளர் பி. டி. எஸ். அவர்களும் ஏற்றுக்கொள்வர்,