பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 - தமிழர் வரலாறு

நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவீர்’’.

--பெரும்பாணாற்றுப்படை : 297-310 இச்சிற்றூர்க்கு அப்பால் உள்ளது நீர்ப் பெயற்று: இச்சொல், நீரால் பெயர் பெற்ற ஊர் எனும் பொருள் உடையது. இது, பெரும்பாலும், காஞ்சி அரசர்களின், தலையாய துறைமுகமும், பிற்காலத்தில், மாமல்லபுரம் என அழைக்கப்படுவதுமாய் கடல் மல்லையைக் குறிப்பது ஆகும், இந்நகரிலும் பிராமணர்கள் சிறக்க வாழ்ந்திருந்தனர். "விளையாடும் இளம்பருவத்து மகளிர், உண்ணுநீர்த் துறையில், அறியாதே போட்டுவிட்டுப்போன, பொன்னால் செய்த, மகர மீன் வடிவிலான காதணியை, அந்நீர்த்துறையில், இரைதேடிக் கொண்டிருக்கும் மீன்குத்திப்பறவை, தான் தேடும் இரையாக எண்ணி எடுத்துக் கொண்டு, பறவைக் கூட்டம் இருக்கும் பனைமரத்து ஓலைக்கண் சென்று தங்களது, கற்றுவல்ல அந்தணர்கள், செய்தற்கு அரிய கடனாகச் செய்து முடித்த வேள்விச் சாலையில் நட்ட கம்பத்தின் உச்சியில் சென்று அமர்ந்து, யவனர் இயற்றிய மரக்கலத்துக் கூம்பின் மேல் அமைத்த அன்னவிளக்குப் போலவும், உயர்ந்த வானத்தில், வைகறைப் போதில் தோன்றும் வெள்ளியாகிய விண்மீன் போலவும் தோன்றும் நீர்ப்பெயற்று” எனக் கூறப்பட்டிருப்பது காண்க:

"வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇப் புனலாடு மகளிர் இட்ட பொலங்குழை, இரைதேர் மணிச்சிரல், இரைசெத்து எறிந்தெனப், புள்ஆர் பெண்ணைப் புலம்புமடல் செல்லாது, கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூணத்து அசைஇ, யவனர், ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட வைகுறு மீனின் பைபயத் தோன்றும்”.

பெரும்பாணாற்றுப்படை: 311-318