பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 தமிழர் வரலாறு

உயர்ந்த மாளிகைகளில் மேல்மாடத்தில், பந்தாடி இளைத்ததும், மாளிகையின் முற்றத்தில் முத்தைப் பரப்பி வைத்தாற் போலும், புது மணல் பரப்பில் அமர்ந்து, கைகளில் அணிந்திருக்கும் பொற்றொடி, மேலும் கீழுமாக அசையப், பொன்னால் ஆன கழங்குக் காய்கள் கொண்டு, மெல்ல மெல்லக், கழங்காடி மகிழ்வர்’.

‘நெல்லுழு பகட்டோடு, கறவை துன்னா: மேழகத் தகரொடு எகினம் கொட்கும், கூழ் உடை, நல்இல் கொடும் பூண்மகளிர் கொன்றை மென்சினைப் பணிதவழ் பவளபோல் பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க, மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந்து ஆலும், பீலி மஞ்சையின் இயலிக், கால, தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக், கைபுனை குறுந்தொடி தத்தப், பைபய, மூத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்'

-பெரும்பாண் 325-335

காஞ்சிமாககர் : -

முருக வழிபாடு போலும் பழந்தமிழ் வழிபாட்டு நெறிகள் சிறப்புற்றிருக்கும். மேலும், பல சிற்றுார்களைக் கடந்து சென்ற பின்னர், வழிப் போவார், மலைச்சாரலில், காந்தள், மலர்க்காட்டில் களிறு வீழ்ந்துகிடப்பதுபோல், பாம்பனைப் பள்ளி மீது இறைவன் அமர்ந்திருக்குங் காஞ்சியை (சரியாகச் சொல்வதாயின், புறநகராம் திருவெஃகாவை) அடைவர். ‘நாடுபல கழிந்த பின்றை நீடு குலைக் காந்தளம் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப் பாம்பனைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்

-பெரும்பாண்: 371-373