பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 தமிழர் வரலாறு

இருந்ததாகக் கூறுகின்றன (No. 123 and 205 of 1899 Referred to in Madras Epic. Reports 1990-17. இப் பட்டயங்கள், கரிகாலன் மக்களில், சோழ நாடாண்ட, மக்களைப் பற்றிப், பொதுவாக அக்கறைகாட்டுவதில்லை) அக் காலகட்டத்தில், தெரிந்த தொண்டைமான், இளந்திரையன் ஒருவனே ஆதலின், கல்வெட்டுக் கூறும், அத்தொண்டைமான், பெரும்பாலும் இளந்திரையனே ஆகும். பெரும்பாணாற்றுப் படையில், இளந்திரையன், தொண்டையர் வழிவந்தவன் எனக் கூறப்பட்டுள்ளான். ('தொண்டையோர் மருக!” . பெரும்பாண் : 454) தொண்டையோர், அல்லது தொண்டையர் என்ற சொல் திரையர் என்ற பெயராலும் அழைக்கப்படும் ஓரினத்து மக்களைக் குறிக்க வழங்கப்பட்டுளது. வேங்கட மலையைக் குறிப்பிடுங்கால், காட்டுர் கிழார் மகனார் கண்ணனார் என்ற புலவர், அது, திரையர்க்கு உரியதாகக் கூறியிருக்கும் நிகழ்ச்சியால், இது உறுதி செய்யப்படுகிறது: ('வென் வேல் திரையன் வேங்கட நெடுவரை'-அகம் : 45.9) இளந் திரையன், பெரும்பாணாற்றுப்படையில், பலவேற் படைகளுக்கு உரிய திரையன், பல்வேல் திரையன் (37) என அழைக்கப்பட்டுள்ளான் என்பதும் ஈண்டுக் குறிப்பிடல் நலம். அதே காலத்தைச் சேர்ந்த, மற்றொரு புலவராகிய எருக்காட்டுர்த் தாயங்கண்ணனார், மழைமேகங்கள் தழுவிக் கிடப்பதும், புகழ் எல்லைக்கு அப்பாற்பட்டதும், எளிதில் ஏறி அடையலாகா, உயர்ந்த உச்சியினையுடையதும், வெண்னுரை தெரிக்கும் மலையருவிகளைக் கொண்டதுமாகிய வேங்கடம், கடும்போர் புரியப் பழக்கப்பட்ட யானைப் படையுடைய தொண்டையர்க்கு உரியது எனக் கூறியுள்ளார்.

      ‘வினை நவில் யானை விறல் போர்த் தொண்டையர்.
       இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு,
       ஓங்கு வெள்ளருவி வேங்கடம்’.
                                                      அகம் :213: 1-3

திரையன் என்ற சொல் ‘கடல்’, ‘அலை’ எனப் பொருள்படும் திரை’ என்ற சொல்லிலிருந்து மட்டுமே