பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இளந்திரையன்

113

இளந்திரையன் பாடல்களும், பெரும்பாணாற்றுப் படைப்பாடலும் சமஸ்கிருத ஆசிரியர்களால் மலிந்த திராவிட நாட்டுக் காஞ்சீபுர மாவட்டத்தில் பாடப்பெற்ற முதல் தமிழ்ப் பாக்களாகும். ஒன்று, அவனால் இயற்றப்பட்ட, அல்லது அவனுக்குப் பெருமைசேர்க்க, அவன் பெயிரில், யாரோ ஒருவரால் இயற்றப்பட்ட இளந்திரையம் என்ற நூல், பிற்கால உரைகளில் குறிப்பிடப்பட்டுளது. இது இப்போது வழக்கிறந்து போனதாகத் தெரிகிறது. இளந்திரையனுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பிராகிருத மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட ஆரியராஜாக்கள் அல்லது ஆரிய மயமாக்கப்பட்ட ராஜாக்கள், காஞ்சி நாட்டை ஆண்டு வந்தனர். வழிவழியாக வந்த சேர, சோழ, பாண்டிய அரசவைகளோடும், தமிழ் நாட்டுக் குறுநிலத் தலைவர்களின் அரசவைகளோடும் மட்டுமே தொடர்பு கொண்டடிருந்த தமிழ்ப் புலவர்களை, அக்காஞ்சி நாட்டுக் காவலர்கள் பேணிப் புரக்கவில்லை. கரிகாலனின் காஞ்சிவெற்றி, அவ்விடத்தைத் தமிழ் இலக்கிய வளைவுக்குள் முதன்முதலில் கொண்டுவந்து சேர்த்தது. இன்றும் அழியாமல் வழக்கில் இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களில், பல்லவர் பற்றிய குறிப்பு அறவே இல்லாமல் இருப்பதை இது விளக்கும். பல்லவர்கள், தமிழர்களாக ஆகிவிட்ட பின்னர், தமிழிலக்கியங்களில், அவர்களைப் பற்றிய குறிப்புகள் மிகப்பலவாம்.

பல்லவ குமார விஷ்ணு கி. பி. ஆறாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் கைப்பற்றும் வரை, காஞ்சீபுரம், சோழப் பேரரசிக்கு அடங்கிய சிற்றரசாகவே இருந்து வந்தது. அவன் வழிவந்தவருள் ஒருவனான சிம்ம விஷ்ணு, சோழ நாட்டையும், தன் ஆட்சியோடு இணைத்துக் கொண்டான். அது, எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொருளின் எல்லைக்கு அப்பாற்பட்டதான மிகப் பெரிய வரலாற்று மாறுதலுக்கு வழிவகுத் துவிட்டது:

--------

த வ, II-8