பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வரலாறு

அழிகள மருங்கின் வாள் வடக்கு இருந்தென”.

-அகம்: 55: 10 - 12.


சேரலாதன், சோழ அரசன் கரிகால் வளவனோடு, வெண்ணிப்போர்க் களத்தில் போரிட்டுத் தோற்றுப் போரில் புறப் புண் பெற்றமைக்கு நாணி, அப்போர்க்களத்திற்கு அணித்தாக வாளோடு வடக்கிருந்து உயிர்விட்டான். இப்பாட்டில் அச்சேரன், சேரலாதன் எனப் பட்டுள்ளான். இச்சேர வேந்தனின் இச்செயலைக் குறிப்பதாகச் செய்யுள் மூலத்தில் எதுவும் இல்லை ஆயினும் 65 ஆம் எண், புறநானூற்றுச் செய்யுளும், இப்போர் பற்றிக் கூறுவதாகக் கூறப்படுகிறது.

“தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
வாள் வடக்கு இருந்தனன்”

-புறம் : 65 : 9 - 10

[மறம் மிக்க மன்னன், தன்போலும் மறம்மிக்க பேரரசன், தன் ஆண்மை குறித்து எறிந்த வேலால் முதுகில் புண் பெற்று விட்டமைக்கு வெட்கி, வாளோடு வடக்கிருந்து உயிர் விட்டான்.]

புறப்பாடல்களைத் தொகுத்துப் பதிப்பித்த ஆசிரியர், அகம் 55 ஆம் எண் செய்யுள். சேரலாதன் வடக்கிருந்ததைக் குறிப்பிடுவதால், இப்புறப்பாடலும் (65) அதே நிகழ்ச்சியைக் குறிப்பதாகவே கருதி, அச்செய்யுளின் கீழ்க் கொடுத்திருக்கும் கொளுவிளக்கத்தில் அவ்வாறே கூறியுள்ளார். அகம், அவன் பெயரைச் சேரலாதன் என்று குறிப்பிட்டிருக்க, இப்பாட்டின் கொளு, அவன் பெயரைப் பெருஞ்சேரலாதன் என்று அழைக்கிறது. இச்சேரனின் பெயர் இக்கொளுவில், அல்லாது வேறு எந்தச் செய்யுளிலும் இடம்பெறவில்லையாகவே இல்வேந்தன் குறித்து இது தவிர்த்து வேறு எதுவும் தெரியவில்லை.