பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தமிழர் வரலாறு



வினவல் ஆனா முதுவாய் இரவல!
தைஇத் திங்கள் தண்கயம் போலக்
கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியன் நகர்
அடு தீ அல்லது சுடுதீ அறியா
திருமருந்து விளைக்கும், நன்னாட்டுப் பொருநன்

கிள்ளி வளவன் நல்லிசை உள்ளி"
- புறம் : 70:1-10

இப்பாட்டின் இறுதியில் ஆளப்பட்டிருக்கும் உவமை, சிறப்பினைக் குறிப்பிடத்தக்கது, என்னால் காண முடிந்த அளவில் மாதங்களின் ஆரிய முறையிலான வரிசைப்பாடும், அவற்றின் சமஸ்கிருதப் பெயர்களும், தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான, மிகப் பழைய குறிப்பு, இதுதான். நற்றிணையில், பெரும்பாலும், இறைவழிபாட்டுக் கடனாகத், தைத்திங்களில், குளிர் நீர்க்குளத்தில் நீராடும் மகளிர் பற்றிய குறிப்பு ஒன்று உளது. ("தைஇத் திங்கள் தண்கயம் படியும்"-நற்றிணை : 80:7) குறுந்தொகை, தைத் திங்களின் குளிர் போலும், குளிர்ந்த சுனைநீர் பற்றிப் பேசுகிறது: ("சுனைத் தெண்ணீர், தைஇத் திங்கள் தண்ணிய" -குறுந்தொகை : 194 : 3-4) இது போலும், தொடர் இடம் பெறும் பாக்கள், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டை விடப் பழைய காலத்தைச் சேர்ந்தனவாகா. புறநானுாற்றுத்தொகை நூலில், பெரும்பாலும் பிற்பட்ட பாக்களில் ஒன்று ஆன, சேரமான், யாணைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொரை என்பானைப் பாராட்டும் புறம் : 229, ஒரு விண் வீழ்கொள்ளி வீழும் அந்நாளன்று, ஞாயிறு திங்கள் போலும் கோள்களும், அசுவனி, பரணி போலும் விண்மீன்களும் இடங்கொண்டிருந்த நிலைகளைத் தெரிவிக்கிறது. அச்செய்தி, அவ்வுற்பாதம் எப்போது இடம் பெற்றது என்பதை நாம் கண்டு கொள்ள, தமக்குப் போதுமானவையோ, அத்துணைத் தெளிவுடையவையோ அல்ல. ஆனால், அந்த அரசன், நாம் ஆய்ந்து கொண்டிருக்கும் பிற்காலத்தைச் சேர்ந்தவருள் ஒருவன் என்பதைக் கொண்டு காணின், அது, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஆதல் இயலாது,