பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

149


மூவேந்தர்களும், புலவரால் விளிக்கப்படும்போது, ஆரியக் கொள்கையின் அடிப்படையில் கொள்ளப்பட்ட ஓர் உவமையும், அப்பாட்டில் இடம் பெற்றுளது. அத்தொடர் இது: இரு பிறப்பாளராம் பார்ப்பனர் வளர்க்கும், முத்தீப் போல, அழகுற வீற்றிருக்கும், வெண்கொற்றக் குடைகளையும், வெற்றிக் கொடி பறக்கும் தேர்களையும் உடைய மூவேந்தர் காள்!"

"முத்தீ புரைய, காண்தக இருந்த

கொற்ற வெண்குடைக், கொடித்தேர் வேந்தீர்!"
-புறம் : 387 - 13-14

இப்பாடற் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று அரசர்கள், கொளுவில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் வகையில், புறநானூறு, தொகை நூலாகத் தொகுக்கப்பட்ட காலத்துக்கு, அதிகம் முற்படாத காலத்து, தமிழரச குலங்களின் கடைசி அரசர்களாம் சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் உக்கிரப்பெருவழுதியும், சோழன் பெருநற் கிள்ளியுமாவர். இம்மூன்று அரசர்களின் காலத்திற்குப் பின்னர், பின்வரும் அதிகாரத்தில் விளக்க இருக்கும், ஒரு அரசியல் பெருமாற்றம் இடம் பெற்றதாகத் தெரிகிறது.

மேலே கூறிய அரசர்களுக்கு மட்டுமேயல்லாமல், வேறு பிற பன்னிரண்டு சோழர்களுக்கும் கொளுக்களின் ஆசிரியரால், பாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும், சோழநாட்டில் ஆட்சி செலுத்தியிருக்க இயலாது. ஒரு நிகழ்ச்சியில் ஒன்பது சோழர்கள், பத்தாவது சோழன் ஒருவனோடு போரிட ஒன்று கூடியிருந்தனர் எனக் கேள்வியுற்றோம். ஆதலின், சோழர் அரியணையில் அமர்ந்து, ஆட்சி புரியாத சோழகுல இளவரசர்களே, அக்கொளுக்களில் கூறப்பட்டுள்ளனர் எனக் கொள்ளுதல் வேண்டும்.