பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தமிழர் வரலாறு


நான்கு மணிகளிலும் நிகழும் பல்வேறு சிறப்புகளைப் புலவர், மீண்டும் நினைவில் கொண்டு எண்ணிக் காண்கிறார்.

"பெரும்பாலும், விடியற்போதை உடன் கொண்டே, வைகை ஆற்றின் பக்கம் இருந்து நகரை நோக்கிச் செல்லத் தொடங்குகிறோம். ஏறத்தாழ ஏழு மணி அளவில் தெருவுகளை அடைகிறோம். என்றாலும் அவை, அப்போதே நிறைந்து, விரைந்து தொழில்படத் தொடங்கிவிட்டன.

கடல் அலைபோல் மோதும் மக்கள் பெருங்கூட்டம், வருவதும் போவதுமாக எங்கும் அலைந்து கொண்டிருந்தது. பல்வேறு மொழியினரும் ஒரு சேர எழுப்பும் பேரொலிக் கலவையில், காற்றால் போதுண்ணும் கடலின் பெருமுழக்கே போலும் முழக்கினைக் கேட்பதல்லது. எதையும் தெளிவாகக் கேட்பது நம்மால் இயலவில்லை. நால்வேறு திசைகளிலும், நிகழும் முரசு முழக்கமும், பாட்டும், ஆட்டமும், வாணிகத்தினால், இன்ப நுகர்ச்சிகள் எழுப்பும் பேரிரைச்சலே பெரிதாம் என்பதை உணர்த்துவதாக இருக்கும். நம் காதுகள், இவ்வாறு, எல்லாத் திசைகளிலிருந்தும் எழும் பல்வேறு ஒலிகளால் தாக்குற்றிருக்க, சூழ இருப்பனவற்றைக் கண்டு களிப்பதில், நம்மை, மீண்டும் ஒப்படைத்துக் கொள்கிறோம். முதன் முதலில் நம் கண்ணில் படுவன எங்கு நோக்கினும், நம் கண்களை மறைக்கும் கொடிக் காடுகள். நகரில், காலம் தவறாமல் முறையாக நடைபெறும் விழாக்கள் குறித்து ஏற்றிய கொடிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கும் ஒரு பால்; பெரும் படைத் தலைவர்கள், நாட்டிற்காக ஆற்றிய அரும் பணிகளைப் பாராட்டி எழுப்பிய கொடிகள், அலை அலையாகப் பறந்து கொண்டிருக்கும் மற்றொரு பால் ; இங்கும், அங்கும் காணும் இடம் எங்கும் விற்கும் கள்ளின் இணையிலா நலம் நவிலக் கள்கடைகள் தோறும் கட்டிவிடப்பட்டிருக்கும் இன்பத் துகிற்கொடிகள் களிநடம் புரியும் ஒவ்வொரு வாணிகம் அல்லது வணிகக் குழுவும், தத்தமக்கே உரிய தனித்தனிக் கொடிகளையும் கொண்டிருந்தன. நாலா பக்கங்களிலும் அலைந்து கொண்டிருக்கும் நம் கண்களை,