பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

தமிழர் வரலாறு

விளக்கம் நம்பக் கூடியதாயின், அவர்கள், வியத்தகு வகையில், திறமை வாய்ந்த, ஒப்புயர் வற்ற ஒர் அமைப்பினராவர். கள்வரையும், அவர்தம் வழிமுறைகளையும். சூழ்ச்சித் திறனையும் கண்டு கொள்ளவல்ல களவியில் அறிவினை முழுமையாகப் பெற்றவராவர். இவை அனைத்தினும் மேலாக அவர்தம் உயர்ந்த கடமையுணர்ச்சி மிகப்பெருமளவில், பாராட்டிற்குரியது. வீதிகளெல்லாம் வெள்ளப் பெருக் கெடுத்து ஓடப் பெருமழை பெய்யும் இரவின் நடுயாமத்தும், நகர்க்காவலாம் தம் கடமைமறந்து, செல்லாதிருப்பதோ, இமைப்போதேனும் உறக்கம் கொள்வதோ செய்யார். அத்தகு நகர்க்காவலர் படைத் தொகுதியால் காக்கப்பட்டு வந்தமையால், நகரம் கவலையறியாக் கடுந்துயிலில் ஆழ்ந்து விடுவதில் வியப்பேதும் இல்லை.

ஆனால், அவ்வினிய அமைதிச் சூழ்நிலை, நெடும்பொழுது நிலைத்திருக்கவில்லை. பொழுது விடிவதற்கு நெடு நாழிகைக்கு முன்னரே, மலரும் பருவத்துப் பேரரும்புகளை மொய்த்துக் கொண்டு, வண்டுக் கூட்டம் முரல்வதுபோல, பிராமணர்கள் வேதம் ஓத, நாம் கேட்கிறோம். இசைக் கருவிகள் இனிய இசையெழுப்பும் நிலையினவாக உள்ளனவா என்பதை உணர, இசைவாணர்கள். அக் கருவிகளில் எழுப்பும் இன்னோசை அடுத்துக் கேட்கத் தொடங்கிவிட்டது. இனிய கணவரோடு இன்பம் கண்டு உறங்கிய இல்லறத் தலைவியர், விழித்து எழுந்து தங்கள் மனைகளை, மாட்டுச் சாணங் கொண்டு மெழுகித் தூய்மை செய்யலாயினர். கள் விலையாளர், கணப்பொழுதும் பின் தங்கி விடுவாரல்லர்: வழக்கமான வாடிக்கையாளர் கூடியிருந்து குடிக்கும், கள் வழங்குமிடங்களை நோக்கிக், களிப்போடு செல்லலாயினர்; வீடுகள் தோறும், வாயிற்கதவுகள் திறக்கப்படுங்கால் எழும் கிரீச் எனும் ஒலி, நகரம், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விரைந்து விழித்துக் கொள்கிறது என்பதை அறிவிப்பதாய் அமைந்தது. நெடுந்துயில் கொள்ளும் இயல்பினவாய கோழிச் சேவல்களின் கூவலோடு, அதிரமுழங்கும் முரசுகளின் முழக்கம், பல்வேறு பறவைகளின் பாட்டொலி, மயில்களின் அகவல், விலங்குப்