பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தமிழர் வரலாறு


பிற்கால வாழ்க்கை:

கரிகாலன் புகழ்டாடும் பிறிதொரு நெடும்பாட்டு, காவிரிப்பூம்பட்டினம் விரிவாக விளக்கிக் கூறப்படும், பாலைத்தினைப் பொருளாகக், கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலை ஆகும். அதில், அப்புலவர், கரிகாலனிடம் பரிசில் பெறுவான் வேண்டிக் காவிரிப்பூம்பட்டினம் செல்லத்துடிக்கும் தன் நெஞ்சை நோக்கிக், “காதலியை விடுத்து, நெஞ்சே! நின்பின் வாரேன்” எனக் கூறியுள்ளார்

“முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன்; வாழிய, நெஞ்சே!”

-பட்டினப்பாலை: 218-20

(என்ற தொடருக்கு அவர் கூறும் இதுவன்று பொருள். “காவிரிப்பூம்பட்டினமே கிடைப்பதாயினும், என் காதலியைப் பிரிந்து, அப்பட்டினம் போலும் பெருஞ்செல்வம் தேட விரையும் நெஞ்சே! உன் பின் வாரேன்” என் ஒரு காதலன் கூறினான் என்பதே இதன் பொருள்: பாடியவர் உருத்திரங் கண்ணனார் ஆயினும், இது அவர் கூற்று அன்று. ஒரு காதலன் கூற்று; அவன் கூற்றைப் புலவர் எடுத்துக் கூறினார் என்பதே பொருள்.)

கரிகாலன், தன் ஆட்சிக் காலத்தில், தலைநகரை, உறையூரிலிருந்து, வளர்ந்து வரும் இக்கடற்கரை நகருக்கு மாற்றினான்; பற்பல நிலைகளைக் கொண்ட மாளிகைகளைக் கொண்ட உறையூரில், திருக்கோயில்களோடு, மக்கள் குடியிருப்புக்களையும் நிறுவினான். பெரிய வாயில்களோடு, சிறுசிறு வாயில்களையும் அமைத்தான். அந்நகரைச் சூழ உள்ள மதில்கள்தோறும், அம்புக்கட்டுக்கள் போலும் படைக் கலப் பொறிகளையும் நிறுவினான்.