பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

தமிழர் வரலாறு


கருதுமாறு செய்துள்ளார் உரையாசிரியர். காடு என்ற சொல் மனைப்புறத்தே, மரம், செடி, கொடிகள் மண்டிக்கிடக்கும் இடமாகிச், சுடுகாடாகவோ, இடுகாடாகவோ பயன்படத் தக்கதாம். இன்றைய நாட்களில், எரிப்பது உலகவழக்காகி விட்டமையால், எங்கெல்லாம் காடு என்ற சொல் குறிப்பிடப்படுகிறதோ, அங்கெல்லாம், அது, உரையாசிரியரால், சுடுகாட்டை உணர்த்துவதாகப் பொருள் கூறப்பட்டுளது. இடமும் சூழ்நிலையும் காட்டுவது போல், அப்பொருள் கோள், தெளிவாகப் பிழைபட்டதே. பின்வரும் தொடர்களில் காடு எனும் சொல், இடு காட்டையே குறிக்கும். "கள்ளிச் செடிகள் அடர்ந்த களர் நிலமாகிய பாழ்பட்ட இடத்து முட்கள் நிறைந்த பெரிய புறங்காடு"

"கள்ளி போகிய களரியம் பறந்தலை

முள்ளுடை வியன் காடு"
- புறம் : 225 : 7-8.

"பிணம் இட்டுப் புதைக்கப்பட்ட பெரிய தாழியின் குவிந்த புறத்தே இருந்த சிவந்த காதுகளைக் கொண்ட கழுகின் சேவலும், பொகுவல் என்னும் பறவையும், வவிய வாயுடைய காக்கையும் கோட்டானும் கூடிப் பேய்க் கூட்டத்தோடு விரும்பியவாறெல்லாம் இயங்கும் இடுகாடு"

"கவி செந்தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ்சேவலும், பொகுவலும், வெருவர
வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஏய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்

காடு"
-புறம் 238 - 1-5;

"களர்நிலமாய், கள்ளிச்செடிமண்டி, பகற்போதிலும் கூவும் கோட்டான்களோடு, பே ய் ம க ளி ர், ஈமவிளக்கொளியில் பிறழ்ந்து ஆடும் மேகங்கள் தவழும் இடுகாடு அச்சம் தருவது ஒன்று."