பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

தமிழர் வரலாறு


உண்டாக்கிய புறப்புண்ணுக்கு நாணி, மறம்செறிந்த வேந்தன் வாளோடு வடக்கிருந்து உயிர்துறந்தான். இனி, ஞாயிறு காயும் பகல், அவனை இழந்து தனித்து வாழும் எமக்கு, முன்பு கழிந்த நாட்கள் போல, இனிமையுடையவாகக் கழியா."

"மண்முழா மறப்ப : பண் யாழ் மறப்ப :
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்பச்
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஒதை மறப்ப, விழவும்
அகல் உள் ஆங்கண் சீறுார் மறப்ப,
உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்,
புன்கண் மாலை மலை மறைந்தாங்குத்,
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி, மறந்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தனன் ; ஈங்கு

நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே"
-புறம் : 65.

பாட்டின் கொளுவிலிருந்து, வாள் வடக்கிருந்து உயிர் துறந்த வேந்தன் சேரமான் பெருந்சேரலாதன் என அறிகிறோம்.

இதே நிகழ்ச்சி, அல்லது அதன் விளைவுகள் அகநானூற்றில் விளக்கப்பட்டுள்ளன. "கரிகால் வளவனொடு வெண்ணிப் போர்க்களத்தில் போரிட்டு, புறப்புண் பட்டமைக்கு நாணிய பெருஞ்சேரலாதன், போரிட்டு அழிந்த அக்களத்தின் ஒருபால், வாளோடு வடக்கிருந்து உயிர் துறந்தான் என்ற, இன்னாமையும் இனிமையும் கலந்த செய்தியைக் கேட்ட சான்றோர்கள், பெறுதற்கரிய துறக்கத்திற்கு அவனோடு செல்லும் பொருட்டுத் தாமும் உயிர்விட்டனர்."