பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

தமிழர் வரலாறு


சேர அரசர்கள், ஆண்டாண்டு காலமாக நிலைபேறு கொண்டிருந்த பழம்பெரும் மரபுகளை உடைத்து உட்புகுவதற்கு வேண்டுமளவு, ஆரிய மயமாக்கப்பட்டுவிட்டனர், ஆனால், அதே நிலையில், ஐம்பெரும் துணைகள், சமஸ்கிருத்தின் தனித்தமிழ் மொழிபெயர்ப்புச் சொற்களாலேயே அழைக்கப்பட்டுள்ளன. அ வ ற் று ள் ளு ம், "நாட்டம்" "கேள்வி" ஆகிய இருசொற்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன என்பதை நோக்க, மொழியாட்சி நிலையில், பழைமை போற்றும் உறுதிப்பாடு இன்னமும் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தது என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. அக்கால கட்டம், ஒன்றிலிருந்து ஒன்றிற்கு நிலைபெயறும் ஒன்றாம் என்பதைக் காட்டும் வகையில் அரசர்களின் உள்ளங்களிவிருந்து பண்டைமரபுகள் மெல்ல மெல்ல பிடிப்பிழந்து போக, பிராமணர்களின் போதனைகள் வலுவாக இடம் பெறலாயின. அரசின் ஒழுக்க நெறிகளைக் காக்கும் காவலர்களாகப் பிராமணர்கள் உயர்வு பெற்று விட்டனர் என்பது, மறை ஓதுதல், வேள்விவேட்டல், அவை இரண்டையும் பிறரைச் செய்வித்தல், வறியார்க்கு ஈதல், பிறர் தமக்குக் கொடுப்பதை ஏற்றல் என்ற ஆறு தொழில்களையும் செய்து ஒழுகும், எக்காலமும் அறநூற் பயனையே விரும்பும் அந்தணர்களை வழிப்பட்டு ஒழுகி" என அரசர்கள் புகழப்படும் அப்பாடற் பகுதியால் உறுதி செய்யப் பட்டுவிட்டது :

"ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல்,
ஈதல், ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்

அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி"
- பதிற்று : 24 : 6-8.

புதிய வழிமுறைகள், தமிழ் நிலத்தில் பரவத் தலைப்பட்டுவிட்டன என்பதற்கான பிற எடுத்துக்காட்டுகள், ஓர் அரசன், கோயில்களுக்கும் பொன் அணிகளை வழங்கினான் என்பதற்கான குறிப்பிடும்-"புரைவயின் புரைவயின் பெரிய நல்கி." (பதிற்று: 15.37): காடுகளை அழித்து ஆங்கே கோயில்கள் கட்டப்பட்டதற்கான குறிப்பீடும் "காடே