பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

தமிழர் வரலாறு


ஆரியக் கோட்பாடுகள் தமிழகத்தில் விரைந்து பரவியதன் விளைவாகத் தமிழ்ப் புலவர்கள். "சேது முதல் இமயம்வரை" என்ற ஆரியச் சொற்றொடரை நன்கு அறிந்துகொண்ட ஐந்தாம் நூற்றாண்டில், அவர்கள் தம் பாக்களில் பணிதவழும் இமயத்தைக் குறிப்பிடத் தொடங்கினர்; இந்தியப் பெரு நிலப்பரப்பு அனைத்தையும் வெற்றி கொண்ட தமிழ் அரசர் ஒவ்வொருவரும், தத்தம் கொடிகளை நாட்டுவதினும், வெற்றியின் நிலையான நினைவுச் சின்னமாம் தம் அரச இலச்சினைகளை இமயத்தின் மீது பொறித்ததாகக் கற்பனைக் கதைகளைக் கண்டுபிடித்தனர். இவ்வெற்றிச் செயல், முதன் முதலில் கரிகாலனுக்கு உரிமையாக்கப்பட்டது: பின்னர்ப் பிறர்க்கும் விரிவாக்கப்பட்டது. தமிழர் ஆட்சியைத் தமிழ் நாட்டு எல்லைக்கு அப்பாலும் விரிவாக்கிய முதல் தமிழரசன், கரிகாலன் ஆவன். தமிழ்ப் புலவர்களின் நில இயல் பற்றிய கொள்கை தெளிவற்ற ஒன்றாதலின், தமிழ் நாட்டு எல்லைக்கு அப்பாற்பட்டது எதுவாயினும், அவர்களுக்கு, அது, (சாதாரண ஆங்கிலேயன் ஒருவனுக்குத் தன் தாய்நாடு அல்லாத அனைத்தும், கடலுக்கு அப்பாற்பட்டதாதல் போல், பீகிங்போலவே பாரிசும் கடலுக்கு அப்பாற்பட்டதாதல் போல்) கங்கை வெளியையும், இமயச் சாரலையும் சார்ந்ததாகிவிடும். ஆகவே, ஒரு தமிழ் அரசன், உண்மையாக அல்லது கற்பனையாகத் தமிழ் நாட்டு எல்லைக்கு அப்பால் ஆட்சியாதிக்கம் பெற்றிருந்தால், அவன் இமயத்தில் அரச இலச்சினையைப் பொறித்துவிடுகிறான். அவ்வகையில், கரிகாலன், தன் புவியைப் பொறித்தான். நெடுஞ்சேரலாதன் வில்லைப் பொறித்தான், பெயர் அறியாப் பாண்டியன் ஒருவன் மீனைப் பொறித்தான். சிலப்பதிகாரம், "முத்து மாலை அணிந்த, வெண் கொற்றக் குடையின் கீழ் அமர்த்திருந்த பாண்டியன், இமயத்து உச்சியில் தான் பொறித்த கயலுக்கு அயலில், புலியையும் வில்லையும் பொறித்த சோழனும், சேரனும், நாவலந்தீவின்கண் உள்ள ஏனைய அரசர்களும் தன் ஏவல் கேட்டு நிற்க நிலம் முழுதும் ஆண்டான்" எனக் கறுகிறது.{{Nop}}