பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

263


ஒரு ஆண், பிறிதொரு ஆணுக்கு மனைவியாதல் இயலாது ஆதலின், அம்மூலம் பிழைபட்டுளது என்றே நாம் கோடல் வேண்டும், இப்பாட்டைப் பதிப்பித்த ஆசிரியர் அந்த வரிகளை எந்தக் கையெழுத்துப் படிவத்திலிருந்து எடுத்தாரோ, அந்தப் படிவத்தை நம்மால் பார்வையிட முடியாத வரை, அந்த வரிகளின் உண்மை வடிவம் யாது என்பதை ஊகிக்கவும் இயலாது. மேலும், பழந்தமிழ்ப் பாக்களின் அழிந்துபோன, செல்லரித்துப்போன பனை ஓலையிலான ஏட்டுப் பிரிதிகள் காக்கப்பட்டிருக்கும் இழிந்த நிலையினை அறிந்த எவன் ஒருவனும், அவ்வரிகளில், அப்பிழை எவ்வாறு இடம் பெற்று விட்டது என்பதை ஆராயத் துணியமாட்டான். திருவாளர் எம். சீனிவாச அய்யங்கார் அவர்கள், மணக்கிள்ளியை, நெடுஞ்சேரலாதனின் தங்கை கணவனாகக் கொள்வதன் மூலம், அச்சிக்கலான முடிச்சை அவிழ்க்கத், தைரியமாக முயற்சித்துள்ளார். (Tamil Studies: p, 287) மலையாள நாட்டில், இன்று நடை முறையில் இருக்கும் அரியணைக்கான உரிமை, மாமனிடத்திலிருந்து மருமகனுக்கு என்ற முறைமை, பண்டைக் காலத்திலும் இருந்ததாக அவர் கருதுகிறார். பழைய சேரஅரசர்கள், தமிழர்கள் மருமக்கள் தாயத்தைப் பின்பற்றும் மலையாள அரச இனங்கள், கி. பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே தோன்றின. குட்டுவன் தந்தை, நெடுஞ்சேரலாதன் அரச உரிமையைத் தன் முன்னோர்க்கு மகன் என்ற முறையில் பெற்றானேயல்லது, மருமகன் என்ற முறையில் பெற்ற வனல்லன்.

குட்டுவன் வீரச்செயல்கள் :

குட்டுவன் புகழ்பாடும் பரணரின் கூற்றுப்படி, அவன் வெற்றிச்செயல்கள், அவன் தந்தையின் வெற்றிச்செயல்கள் போலவே ஒரு சிலவாம். அரசவைப் புலவர்கள் செய்வது போலவே இப்புலவரால், தந்தையின் வெற்றிகள் எல்லாம் இவனுக்கும் ஏற்றி உரைக்கப் பட்டுள்ளன. "கற்களால் உயர்த்த நெடிய மலையாகிய இமயம்