பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

தமிழர் வரலாறு


வடஎல்லையாக, தெற்கு எல்லை குமரியாக, அவற்றின் இடையே உள்ள நாட்டில், பகையரசர்களின், முரசுமுழங்கச் செய்யும் போர்கள் எல்லாம் கெட்டு அழிய, வெற்றி ஆரவாரம் உண்டாக, அப்பகையரசர்களின் புகழ் மிக்க நாடுகளுள் புகுந்து, அவற்றின் பண்டை நலங்களைக்கெடுத்து அழித்த, போரில் எதிர்ப்படுவாரை அழித்து வெற்றி கொள்ளும் நாற்படையினையும், பொன்மாலையினையும் உடைய குட்டுவனே ?" என அவன் அழைக்கப்பட்டுள்ளான். பகையரசர் எழுவரின் மணிமுடிகளை அழித்துப் பண்ணிய பொன் மாலையை மார்பில் அணிந்த எனும் சிறப்பும், தந்தையிடமிருந்து மகனுக்கு மாற்றப்பட்டுளது.

"கல்லோங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயமாகத்,
தென்னங் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமம் ததைய, ஆர்ப்பு எழச்
சொல் பல நாட்டைத் தொல்கவின் அழித்த

போரடுதானைப், பொலந்தார்க் குட்டுவ!"
-பதிற்று : 43 : 6-11.
"எழுமுடி மார்பின் எய்திய சேரல்"
-பதிற்று. 45 : 6

இவ்வரசனைப் பற்றிய பிறிதொரு பாராட்டு, அவன் பெயரோடு, வேல் எறிந்து கடலைப் புறங்காட்டச் செய்த எனும் பொருள் தருவதான, "கடல் பிறக்கு ஓட்டிய வேல் கெழு" எனும் சிறப்பு அடைமொழியினை இணைக்க உதவிய ஒன்றாம். கடல் மீது கொண்ட இவ்வெற்றி அடுத்தடுத்துக் கூறப்பட்டுளது. "வெள்ளிய தலையாட்டத்தினையும், விரைந்த செலவினையும் உடைய குதிரையூர்ந்து செல்லும் நின்கால்கள், ஓவென ஒலிக்கும் அலைகளைக் கொண்ட குளிர்ந்த கடல் காற்றால் அலைப்புண்டு சிறுசிறு திவலைகளாக உடையுமாறு அக்கடலிடையே சென்று போரிட்டன."