பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

தமிழர் வரலாறு

முதுமாக்கள் வியன் நகர்க் கரந்த அருங்கல வெறுக்கை” (அகம் : 258 : 372.)

பாழி நகர் மீது போர் தொடுத்து வந்த, தேர்ப்படை முதலாம் படைவலம் மருந்த மிஞிலி என்பானைத் தன் பொருட்டு எதிர்த்துப் போரிட்டு உயர் நீத்த தன் நண்பன் ஆஅய் எயினனின் உடலைக் காணவும் வராது ஒளிந்து கொண்டு, பழி கொண்டான் நன்னன். ஆஅய் எயினன் அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு, நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென ......... ... ...நன்னன் அருளான் கரப்ப.’ (அகம் : 208).

நன்ன்ன் பற்றிப் பரணர் கூறியன இவை. ஆக, மாமூலனாரும் அவனால் பாடப்பெற்ற பாழிநகர் நன்னனும், பரணரும், அவரால் பாடப்பெற்ற மூவேந்தர்களும் வாழ்ந்த காலத்தவரே அல்லது, திருவாளர் அய்யங்கார் கூற்றுப்படி கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் அல்லர் என்பது உறுதியாதல் காண்க.

10. பரணன் : தமிழகத்து வடக்கண் உள்ளதான நல்ல நாட்டைச் சேர்ந்தவன் என மாமூலனாரால் கூறப்பட்ட பரணன் ("வடாஅது, நல்வேல் பாணன் நன்னாடு’ (அகம் : 325), தமிழகம் வந்து, கணையன்பால் பயிற்சி பெற்று, வெல்லற்கு அரியவன் எனச் சிறந்து விளங்கிய ஆரியப் பொருநன் என்ற மற்போர் வல்லானை மற்போருக்கு அழைத்து, அவ்வாரியப் பொருநனின், முழவு போலும் தோள்கள், தன் கையகத்தே அகப்பட்டுக்கிடக்க, உடல் இரு கூறுஆகிப்போக வெற்றி கொண்ட செய்தியையும், பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி, எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் நிறைத்திரள் முழவுத்தோள் கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை’ (அகம் : 386) அவ்வெற்றிக் களிப்பால், கட்டி எனும் மற்றுமொரு வடநாட்டு வீரனையும் துணைகொண்டு, தித்தன் வெளியனையும். வெல்லக்கருதி, அத்தித்தனுக்கு உரிய உறந்தை நகரை அணுகிய போது,